வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்
Updated on
2 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ம் நாளான இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி, விவாதங்களில் பங்கேற்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

அப்போது பேசிய ஓம் பிர்லா, “நான் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்துகிறேன். அவையின் கண்ணியத்தையும் மரபையும் மீறும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார். ஆனாலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை 12 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. கடும் அமளிக்கு மத்தியில் பொதுத் தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடு முழுவதும் மாணவர்கள் எழுப்பிய கவலைகளை கருத்தில் கொண்டு வினாத்தாள் கசிவு போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஒரு முக்கிய மசோதா மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் இதை விவாதிக்க மறுத்து, அமளியில் ஈடுபடுகின்றன. பிரதமர் எடுத்துள்ள முக்கிய முடிவை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். தேர்வு முறையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை சீரமைக்கவும் எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஒரு புரட்சிகரமான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் எவருக்கும் கடுமையான மற்றும் காலக்கெடுவுக்குள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் விவாதம் அனுமதிக்கப்படாவிட்டால், அது தவறான செய்தியை அளிக்கும். நாட்டின் மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எங்கே நாம் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடியும்? நாடாளுமன்றத்தில் முழுமையான வெளிப்படையான விவாதத்தை நடத்த முன்வாருங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

வினாத்தாள் கசிவு மசோதா: நீட் வினாத்​தாள் கசிவு விவகாரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்டத்​தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது.

தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​களை தடுத்​தல்) சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்​கிய திருத்தங்கள் செய்​யப்​பட்டு புதிய மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது.

மசோதா குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறியதாவது: புதிய மசோ​தா​வின்​படி வினாத்​தாள் கசிவு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​படும், குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படு​வோருக்கு 10 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும். முறை​கேடு​களில் ஈடு​படும் தேர்​வர்​கள் அடுத்த 8 ஆண்​டு​கள் எந்​த ஒரு பொதுத்​தேர்​வை​யும் எழுத முடி​யாது.

வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க சிறப்பு அதிரடிப் படை (எஸ்​டிஎப்) நியமிக்​கப்​பட்டு, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட 3 மாதங்​களுக்​குள் விசாரணையை முடிக்க வேண்​டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்
ஜூலை 20 மாணவர் போராட்டத்தில் காவல் துறை தடியடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in