

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகளை பலவீனமாக்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் அவற்றின் நம்பகத் தன்மையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் பிரச்சாரம் தீவிர கவலை அளிப்பதாக உள்ளது.
அரசியலமைப்பு அமைப்புகளை தொடர்ந்து திருடர்கள், சமரசம் செய்யப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவது, ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. அமைப்புகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், அவற்றை இழிவுபடுத்துவது ஜனநாயக உரிமை அல்ல. இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான நீதிபதி ஹேமந்த் குப்தா, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.