பொன்னி முதல் இட்லி அரிசி வரை... தொடர் விலை ஏற்றம் ஏன்?

பொன்னி முதல் இட்லி அரிசி வரை... தொடர் விலை ஏற்றம் ஏன்?
Updated on: 
2 min read

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச்சந்தைப் புள்ளிகளில் இல்லை; சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் உணவில் இருக்கிறது. சத்தமே இல்லாமல் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ள அரிசி விலை, நடுத்தர மக்களின் மாதாந்திர வரவு - செலவு கணக்கை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.

இந்திய சமையலறைகளின் அடையாளமாகவும், தென்னிந்திய மக்களின் முதன்மை உணவாகவும் திகழும் அரிசி, தற்போது சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. பருவமழை பொய்த்தது முதல் சந்தை வரத்துக் குறைந்தது வரை பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், இதன் நேரடிப் பாதிப்பைச் சுமப்பது அடித்தட்டு மக்களே.

முன்பெல்லாம் ஆடம்பரப் பொருட்களை வாங்க யோசித்த சாமானியர்கள், இன்று ஒரு மூட்டை அரிசி வாங்க யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காலநிலை மாறுபாடுகளும் ஊக வணிகமும் சேர்ந்து ஏழைகளின் வயிற்றுப் பசியை வீரியமாக்கியுள்ளன.

கடந்த சில மாதங்களாக 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண அரிசி சில்லறையில் கிலோ ரூ.70 எனவும், 26 கிலோ மூட்டை ரூ.1,800 எனவும் உயர்ந்துவிட்டது. உயர் ரக அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.82 ஆக உயர்ந்து, மூட்டை ரூ.2,150 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

நெல் சாகுபடி முழுவதும் பருவமழையையும் நீர்ப்பாசனத்தையுமே நம்பியுள்ளது. காலநிலை மாற்றத்தால் நிலவிய மாறுபட்ட சூழல்கள் நெல் உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

நாடு முழுவதும் கரீஃப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு 449.18 லட்சம் ஹெக்டேரில் இருந்து 433.62 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நெல் சாகுபடி பரப்பில் 3.46% சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.

இந்தச் சரிவுக்கு ‘எல் நினோ’ தாக்கமும் ஒரு முக்கியக் காரணம். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் சாகுபடி பரப்பளவு குறைந்தது. அணைகளில் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்தூளைக் கிணறுகளை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் சூழல் ஏற்பட்டு, உற்பத்திச் செலவும் அதிகரித்தது.

இதனால்தான் நீர் அதிகம் தேவைப்படாத குறுகிய காலப் பயிர்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு மாறுமாறு விவசாயிகளுக்கு வழிகாட்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “பயிர் சாகுபடி உத்தியை மாற்றுவது காலத்தின் கட்டாயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பருவமழை - சந்தை நிலவரம்

தென்மேற்குப் பருவமழை நீண்டகால சராசரியை விட 12.6% முதல் 13% வரை குறைவாகவே பதிவானது. வானிலை ஆய்வு மையத் தகவல்படி, 42% பரப்பளவில் பற்றாக்குறை மழையே பதிவானது.

மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,440 ஆக உள்ளது. ஆனால், திறந்தவெளிச் சந்தையில் நெல் விலை ரூ.4,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை 5.59% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 52.4% அதிகரித்துள்ளது.

முக்கியக் காரணங்கள்:

வரத்துக் குறைவு: ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தமிழகம் போன்ற நுகர்வு மாநிலங்களுக்கு வரும் நெல் மற்றும் அரிசி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.

உற்பத்திச் செலவு உயர்வு: உரம், டீசல், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விவசாயக் கூலி உயர்ந்ததால், நெல்லின் சந்தை விலையும் இயல்பாகவே உயர்ந்தது.

கையிருப்புக் குறைவு: ஆலை உரிமையாளர்களிடம் போதிய நெல் கையிருப்பு இல்லாததால், சந்தைத் தேவையை விட விநியோகம் குறைவாக உள்ளது.

பண்டிகைக் காலத் தேவை: தீபாவளி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் பண்டிகைக் காலங்களில் அரிசிக்கான நுகர்வுத் தேவை அதிகரிப்பதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

எந்தெந்த ரகங்களின் விலை எவ்வளவு?

> டீலக்ஸ் பொன்னி: 26 கிலோ மூட்டை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆக உயர்வு

> பொன்னி அரிசி: 26 கிலோ மூட்டை ரூ.1,600-ல் இருந்து ரூ.1,950 ஆக உயர்வு

> வெள்ளை பொன்னி ரூ.2,300 ஆக அதிகரிப்பு

> இட்லி அரிசி: 26 கிலோ மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்வு

> பாஸ்மதி அரிசி: 30 கிலோ மூட்டை ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்வு

அடுத்து என்ன?

தீபாவளிப் பண்டிகை மற்றும் புதிய மகசூல் வரத்து தாமதத்தால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு விலை உயர்வு நீடிக்கலாம். புதிய அறுவடை நெல் வரத் தொடங்கும் ஜனவரி, பிப்ரவரிக்குப் பின் விலை படிப்படியாகக் குறையும். தேவைப்பட்டால் அரசு வெளி விற்பனைத் திட்டம் மூலமும், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மூலமும் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும்.

பொன்னி முதல் இட்லி அரிசி வரை... தொடர் விலை ஏற்றம் ஏன்?
பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பு ஏன்? - ‘ஷாக்’ நிலவரம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in