“பாஜகவுக்கு அசாமில் சதம், மேற்கு வங்கத்தில் இரட்டை சதம்” - ஹிமந்த பிஸ்வ சர்மா நம்பிக்கை

“பாஜகவுக்கு அசாமில் சதம், மேற்கு வங்கத்தில் இரட்டை சதம்” - ஹிமந்த பிஸ்வ சர்மா நம்பிக்கை
Updated on
1 min read

கொல்கத்தா: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களிலும், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “இம்முறை நாங்கள் அசாமில் சதம் அடிப்போம். மேற்கு வங்கத்தில் இரட்டை சதம் அடிப்போம். அதாவது, அசாமில் 100 இடங்களை வெல்வோம். மேற்கு வங்கத்தில் 200 இடங்களை வெல்வோம்.

மேற்கு வங்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும் பாஜக ஆட்சியை அமைக்கவுமே பொதுமக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். மேற்கு வங்க முதற்கட்டத் தேர்தலிலேயே பாஜக 110 இடங்களை வென்றுவிட்டது. மேற்கு வங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சுனாமி போன்ற அலையால், பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அது அச்சரியப்படும் விஷயமாக இருக்காது.

மேற்கு வங்கத்தில் 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நான் பங்கேற்றுள்ளேன். இம்முறை பாஜக மீதான பொதுமக்களின் பார்வை, நாங்கள் இதற்கு முன் கண்டிராத ஒன்று. மக்கள் இப்போது பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் வாக்களிக்கச் சென்றவர்களின் மனதில் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. முதல் கட்டத் தேர்தல் முடிந்த பிறகு இங்குள்ள சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவே வெற்றி பெறப் போகிறது. மக்கள் இதை இப்போது உறுதியாக நம்புகிறார்கள்.

நாட்டை வலுப்படுத்துவதும், மக்கள் தொகை சார்ந்த கவலைகளுக்குத் தீர்வு காண்பதும் நமது குறிக்கோளாக இருந்தால் நாம் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் கிழக்கு இந்திய பகுதி வங்கதேச முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்றுவிடும்” என தெரிவித்தார்.

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததும்.

அதன்படி, முதல்கட்டத் தேர்தல் 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 23ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தலில் 142 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக இருக்கின்றன.

“பாஜகவுக்கு அசாமில் சதம், மேற்கு வங்கத்தில் இரட்டை சதம்” - ஹிமந்த பிஸ்வ சர்மா நம்பிக்கை
மே.வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in