

புதுடெல்லி: செல்போன் மோகத்தில் சிக்கியிருக்கும் மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 82 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் நேற்று நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். பின்னர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் பாரம்பரிய கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தக் குறையைப் போக்க மாணவ, மாணவியரின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும். குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பதின்பருவ மாணவ, மாணவரிடையே போதைப் பொருளின் தீமைகள் குறித்து ஆசிரியர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்க வேண்டும். போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை, ஆசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி பருவத்தில் மாணவ, மாணவர்கள் மத்தியில் செல்போன் மோகம் அதிகரித்து வருகிறது. சில மாணவர்கள் நள்ளிரவு வரை மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை ஆசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும். மைதானங்களில் விளையாடத் தொடங்கும்போது மொபைல் போன் மோகம் படிப்படியாக குறையும்.
மாணவ, மாணவியரின் நலன்களை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி வகுப்பறை மட்டுமன்றி வெளிஉலக வாழ்க்கை குறித்தும் மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆசிரியர் தினம் என்பது நமது சமூகத்துக்கு ஆசிரியர்கள் ஆற்றும் மகத்தான பங்களிப்பை பாராட்டுவதாகும். மேலும் இது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் நாள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.