

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாப்பூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில், ராஜஸ்தானில் இருந்து பெங்களூரு வழியாக ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1,031 கிலோ ஓபியம் (அபின்-கருப்பு மருந்து) மற்றும் 25 கிராம் மெஃபெட்ரோன் (எம்.டி) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த கும்பல், கூரியர் சேவைகள், தனியார் பேருந்துகள், ரயில்கள், கார்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் போதைப்பொருட்களைக் கடத்தி வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து இதுவரை 78 குழுக்கள் மூலம் ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்தர் குமாவத் என்பவர், பெங்களூரு வழியாக ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக ‘எம்.ஆர் டிராவல்ஸ்’ தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.