

புதுடெல்லி: பாகிஸ்தான் உளவுத் துறையின் சதித் திட்டத்தில் (ஹனி டிராப்) சிக்கி பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாக விங் கமாண்டர் ஒருவர் மீது இந்திய விமானப்படை புகார் செய்தது.
இதன் அடிப்படையில், டெல்லி காவல் துறையின் உளவுப் பிரிவு மற்றும் விமானப்படையின் உளவுப் பிரிவு இணைந்து நடத்திய நடவடிக்கையில், கடந்த மே 31, 2026 அன்று இரவு அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விங் கமாண்டரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் டெல்லி போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விங் கமாண்டர் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான கட்டத்தைக் கடந்துகொண்டிருந்த அந்த அதிகாரி, சமூக வலைதளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகத் தொடங்கியுள்ளார்.
அந்தப் பெண் படிப்படியாக அதிகாரியின் நம்பிக்கையைப் பெற்று, ராணுவ நடவடிக்கைகளின் நகர்வுகள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார். மேலும், முக்கிய ஆவணங்களை அந்தப் பெண்ணுக்கு அதிகாரி அனுப்பியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.