

ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் அபராத கட்டண பாக்கி ரூ.925 கோடியை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து மின்சார கட்டணத்துடன் வசூலிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் ஆலோசனையை மாநில அரசுகளுக்கு வழங்கியது. மேலும், இதுவரை அபராதம் செலுத்தாதவர்களிடமிருந்து மின்கட்டணம் மூலமாக கூட அவர்களிடமிருந்து வசூலிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.
தெலங்கானாவில் கடந்த 2024 ஜனவரி 1 முதல் 2026 ஆகஸ்ட் 15 வரை போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் 3.7 கோடி பேர். அதாவது மாதத்திற்கு 12 லட்சம் பேராகும். ஒரு நாளுக்கு 39,400 பேர், நிமிடத்திற்கு 27 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த 32 மாதங்களில் ரூ.1,332.42 கோடி அபராத தொகை கட்டப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதில் 25% பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தி உள்ளனர். மீதம் ரூ.925.77 கோடி தெலங்கானாவில் மட்டும் அபராத கட்டண தொகை பாக்கி உள்ளது.
இதனை எவ்வாறு சம்பந்தப்பட்டவர்களின் மின்சார கட்டண பில்லில் சேர்ப்பது என்பது குறித்து தெலங்கானா போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.
அதிவேகம், சிக்னலில் நிற்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாதது, ராங்ரூட்டில் செல்வது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசியவாறு செல்வது என போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகிறது. விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் அபராத கட்டணம் வசூலித்தால் மட்டும் போதாது, அவர்களின் ஓட்டுனர் உரிமமும் பறிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.