

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட புகார் மீது விசாரணைகளும், கைதுகளும் தொடர்கின்றன. இந்த சர்ச்சை காரணமாக ராமர் கோயிலுக்கான காணிக்கையும் குறைந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இச்சூழலில், குழந்தை ராமர் மீதான நம்பிக்கையையும் கோயில் ஊழியர்கள் மீதான மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வு நேற்று முன்தினம் ஸ்ரீராம ஜென்மபூமி வளாகத்தில் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலிருந்து அயோத்திக்கு வந்த எஸ்.நாகலட்சுமி என்ற பெண் பக்தர், ராமர் கோயிலுக்காக ரூ.10,000 நன்கொடை அளித்தார். அதே வேளையில், கோயில் ஊழியர்களுக்காக ரூ.4 கோடிக்கான காசோலையும் வழங்கினார். இதுபோன்ற பெரிய தொகை கோயில் கட்டுமானம் அல்லது பிற ஏற்பாடுகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தமிழரான நாகலட்சுமி, ஊழியர்களின் நலனுக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
இதுகுறித்து ராம ஜென்ம பூமி வளாகத்தில் பரவலான பேச்சு எழுந்தது. பெண் பக்தரான நாகலட்சுமி, முதலில் பிர்லா தர்மசாலாவுக்கு எதிரே அமைந்துள்ள ‘யாத்ரி சேவா கேந்திரா'வில் (பயணிகள் சேவை மையம்) தனது நன்கொடை குறித்த விவரங்களைத் தெரிவித்தார். ராமர் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிகளை மேம்படுத்தவும், அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அந்த ரூ.4 கோடி தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான ரசீது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் கர்வேவக்புரத்தில் உள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்கு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவர், கோயில் ஊழியர்களின் நலனை உறுதி செய்தும் ராமருக்காக செய்யும் சேவையின் ஒரு பகுதி என தன் நம்பிக்கையை தெரிவித்தார்.
காணிக்கை திருட்டு தொடர்பான தேசிய அளவிலான சர்ச்சை நிலவும் சூழலில், கோயில் ஊழியர்களுக்காக ரூ. 4 கோடி என்ற பெரும் தொகையை வழங்கியது ஒரு முக்கிய செய்தியை வெளிப்படுத்தியது. அதாவது, ராமர் கோயிலின் பிரம்மாண்டத்தைப் போலவே, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்பு மீதும் பக்தர்களுக்கு மரியாதையும் அக்கறையும் உள்ளது என்பதையும் இந்நிகழ்வு உணர்த்தியது.