ஒரு பூவால் சிக்கிய Q காமர்ஸ் நிறுவனங்கள் - கர்நாடகா கெடுபிடியும் பின்புலமும்

பிரதிநிதித்துவப் படம்: மெட்டா ஏஐ

பிரதிநிதித்துவப் படம்: மெட்டா ஏஐ

Updated on
3 min read

காபி முதல் காஸ்ட்யூம் வரை இன்ஸ்டன்ட்டாக டெலிவரி செய்து கொண்டிருக்கின்றன Q காமர்ஸ் நிறுவனங்கள். இந்தியச் சந்தை இத்தகைய Quick Commerce நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபச் சுரங்கம்.

அதனாலேயே Quick Commerce நிறுவனங்கள் இங்கே சுழன்றடித்து செயல்படுகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 15 நிமிடங்களில் அதிவேகத்தில் (அல்ட்ரா ஃபாஸ்ட்) பொருட்களை டெலிவரி செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ளது இந்தியா. நடப்பாண்டில் (2026) இந்தியாவின் Quick Commerce சந்தையின் மதிப்பு 3.65 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது.

அப்படியிருக்க, கர்நாடகாவில் ஒரே ஒரு பூவால் Q காமர்ஸ் நிறுவனங்கள் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளன. அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக் பாஸ்க்ட் குவிக் காமர்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கியிருந்த உணவு வழங்கல், விநியோக உரிமத்தை (ஃபுட் லைசனஸ்) ரத்து செய்திருக்கிறது கர்நாடகா மாநில அரசு. இது நிரந்தர ரத்து அல்ல, ஒருவேளை இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் முன்னரோ அல்லது எழுதப்பட்ட சில மணி நேரங்களிலோ கூட அந்த லைசன்ஸ் ரத்து வாபஸ் வாங்கப்படலாம் / பட்டிருக்கலாம்.

ஆனாலும், கர்நாடக அரசின் கெடுபிடி குறித்தும், Q காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஏன் இந்தியாவில் சில கடிவாளங்கள் அவசியம் என்பதைப் பற்றியும் அவர்கள் பாணியிலேயே குவிக்காக பார்த்துவிடுவோம்.

சர்ச்சையை ஏற்படுத்திய தத்தூரா பூ

தத்தூரா... ஆங்கிலத்தில் இதை தார்ன் ஆப்பிள் (thorn apple) என்றழைக்கிறார்கள். Datura stramonium (ஊமத்தை) தாவர இனத்தைச் சேர்ந்த இது நச்சுத்தன்மை நிறைந்தது. சித்த மருத்துவத்தில் இதை ‘மத்தன் எண்ணெய்’ தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக சில தகவல்கள் கூறகின்றன. இருப்பினும் இதனை அப்படியே வாய்வழியாக உட்கொள்ளக் கூடாது. இவ்வகை தாவரம் கொடிய நச்சுத்தன்மை கொண்டது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்நிலையில், கர்நாடகாவில் இந்த வகை தத்தூரா பூ மற்றும் அதன் விதைகள் ஸ்விகி இன்ஸ்டாமார்ட், அமேசான் மற்றும் பிக் பாஸ்கட் குவிக் காமர்ஸ் தளங்களில் உணவுப் பொருட்களின் கீழ் பட்டியலாகி விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India - FSSAI) லைசன்ஸ், பதிவு பெற்றதற்கான அறிவிப்புகளோடு பட்டியலாகி விற்பனையாகியிருக்கின்றன.

இது வெளிச்சத்துக்கு வர, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ் (Food Safety and Standards Act, 2006) அதிகாரிகள் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உணவு லைசன்ஸை ரத்து செய்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படியும், கர்நாடக அரசு வெளியிட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்தூராவும் அல்கலாய்டுகளும்!

தத்தூராவின் பூ, விதைகள், இலைகள் என எதை உட்கொண்டால் அது மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

காரணம், தத்தூராவில் சக்திவாய்ந்த அல்கலாய்டுகள் (Alkaloids) உள்ளன என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அல்கலாய்டு என்பவை தாவரங்கள் மற்றும் சில உயிரினங்களில் இயற்கையாகக் காணப்படுகிற, நைட்ரஜன் அணுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள். அந்த வகையில் தத்தூராவில் atropine, scopolamine hyosciamine போன்ற அல்கலாய்டுகள் இருக்கிறதாம்.

இந்தத் தாவரத்தின் பூ, இலை, விதை என எதை மிக மிகக் குறைந்த அளவில் உட்கொண்டாலும் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக உணரும் மாயத்தோற்றம் (ஹேலூசினேஷன்) சிந்தனையில் குழப்பம் (டெலிரியம்) ஆகியனவற்றை இது ஏற்படுத்தும் என்கின்றனர். இதயத்துடிப்பை அதிகமாக்கக் கூடிய தன்மையும் இதற்கு உண்டாம். மேலும், காய்ச்சல், மங்கலான பார்வையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அதிகமாக உட்கொள்ளும் பட்சத்தில் வலிப்பு, கோமா, உயிரிழப்பு வரை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இந்தியாவில் குற்றங்களில் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் தத்தூரா பல்வேறு கிரிமினல் குற்றங்களிலும் பல வகைகளிலும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் சமையல் வீடியோவைப் பார்த்து தத்தூரா (ஊமத்தம்) பூவைக் கொண்டு பருப்புக் கூட்டு செய்து உட்கொண்ட காக்கிநாடாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது இங்கே நினைவுகூரத்தக்கது.

தத்தூரா 

இத்தகைய ஆபத்து நிறைந்த ஒரு பூவை, குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்ததால் தான், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி கர்நாடக அரசு உணவுப் பொருள் வழங்கல், விநியோக உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கையை எடுத்துள்ளது.

தத்தூரா மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றது என்று இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளதால், பொதுமக்களும் இந்தத் தாவரத்தை யாரேனும் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிந்தால் அதைப் பற்றி உடனடியாக அரசுக்கு தகவல் அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

உணவு லைசன்ஸின் அவசியம் என்ன?

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ், உணவு, உணவுப் பொருள் விற்பனை, விநியோகத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் ஃபுட் பிசினஸ் ஆப்பரேட்டர்கள் (Food Business Operators - FBOs) என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இ காமர்ஸ், குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் உணவுப் பொருள் விற்பனை, விநியோகம் செய்தால் அவையும் FBO கீழ் வந்துவிடுகிறது. அதனால் அவை ஆன்லைன் வர்த்தம் செய்தாலும் கூட உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவது அவசியமாகிறது. அந்த வகையில் தான் இப்போது ஸ்விகி இன்ஸ்டாமார்ட், அமேசான், பிக் பாஸ்கட் கர்நாடக உணவுத் துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன.

இருந்தாலும் இந்த உரிமம் ரத்து நடவடிக்கை மீதும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஏனெனில், இந்தியாவில் இயங்கும் இ காமர்ஸ், குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் பல இடங்களில் தங்களுடைய பொருட்களுக்கான ஹப் (சேமிப்பு வளாகம்) வைத்திருப்பதால். ஒவ்வொரு வளாகத்துக்கும் தனித்தனி உரிமம் பெற்று இயங்குகின்றன.

இந்தநிலையில், கர்நாடக அரசின் உத்தரவில் எந்த உரிம எண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அல்லது அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களின் எந்த குறிப்பிட்ட வளாகங்கள் அல்லது செயல்பாடுகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

அதனால் இந்த மூன்று நிறுவனங்களும் கர்நாடகா முழுவதுமே உணவுப் பொருட்கள் சார்ந்த விற்பனையை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதைச் சுட்டிக் காட்டும் நிபுணர்கள், “உணவு பொருட்களை விற்பனை, விநியோகம் செய்ய இதுபோன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு வழங்கும் ஃபுட் லைசனஸ் உரிமத்தில் கூடுதல் கவனமும், பரந்துபட்ட கெடுபிடிகளையும் வகுப்பது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.

பொது மக்களை லாபம் பார்க்கும் சந்தையாக பார்க்கும் போக்கை நிறுவனங்களும் நிறுத்திக் கொண்டு தார்மிக ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வோடு இயங்க வேண்டும். அரசும் இதில் கூடுதம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே மருந்துப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது ஆபத்தான ட்ரக்ஸ் சர்வசாதரணமாக விற்பனையாவதாக புகார்கள் எழுந்ததையும் கருத்தில் கொண்டு கடுமையான சட்டத் திட்டங்களை வகுக்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகின்றனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்: மெட்டா ஏஐ</p></div>
சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in