

புதுடெல்லி: பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இலவசங்களை அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டது.
அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது என்றும் ஆனால் இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் குழப்பிக்கொள்ளக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை விரைந்து விசாரிக்கக் கோரி, மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று முறையிட்டார். “இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. எனவே வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்வது தொடர்பாக எதிர்மனுதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், “இலவசங்கள் அறிவிப்பு தொடர்பாக ‘குழு’ அமைத்து ஆய்வு செய்யும் விவகாரத்தில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை” என்று தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார். அவர் கூறும்போது, “முக்கியமான பல வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிப்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.