

திருப்பதி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா உட்பட பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், இரவு திருமலையில் தங்கிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின்னர், ரங்க நாயக மண்டபத்தில் தலைமை நீதிபதிக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து, வேத பண்டிதர்களால் ஆசி வழங்கப்பட்டது. அதன் பின்னர், தலைமை நீதிபதிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி மற்றும் உயர் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, திருப்பதியில் தாமினேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட உள்ள 16 கட்டிடங்கள் கொண்ட திருப்பதி மாவட்ட புதிய மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் தலைமை நீதிபதி பேசும்போது, “நீதிமன்றங்களில் இரு தரப்பு வாதங்களும் சரியான முறைப்படி இருத்தல் அவசியம். அப்படி இருந்தால் தான் நீதிபதியும் சரியான தீர்ப்பை வழங்க முடியும். அப்படி நியாமான தீர்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் தான் மக்களுக்கு சட்டம், நீதிமன்றங்கள், நீதிபதிகள் மீது நம்பிக்கை ஏற்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்குர் உட்பட பல்வேறு மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.