

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தாக்கியது. இந்நிலையில் தற்போது இராக்கிலும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஓமன் அருகே கடலில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பல் மீது திடீரென ஈரான் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இந்தக் கப்பல் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து இந்தக் கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 20 பேர் மீட்கப்பட்டனர். தாக்குதலில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த 20 ஊழியர்களில் 5 பேர் ஈரான் நாட்டவர் ஆவர். மேலும் ஏவுகணை தாக்குதல் மூலம் ஓமனின் துக்கும் துறைமுகமும் தாக்கப்பட்டதாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பல் ஊழியர்கள் 20 பேரும் தற்போது பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.