

சென்னை: ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆடவர் ஜூனியர் அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது.
இதில் இந்திய அணி 14-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பிரப்தீப் சிங் 5 கோல்கள் அடித்து அசத்தினார். கேப்டன் அன்மோல் 4 கோல்களையும், அஜீத் யாதவ் 3 கோல்களையும் அடித்தனர். மேலும் ஹர்பால், அஷு மவுர்யா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மகளிருக்கான போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
கால் இறுதியில் அனஹத் சிங் தோல்வி
லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங் தோல்வி அடைந்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், 4-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சிவசங்கரி சுப்பிரமணியத்துடன் மோதினார். இதில் அனஹத் சிங் 4-11, 4-11 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
தெற்கு ரயில்வே அணி வெற்றி: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் தெற்கு ரயில்வே - இந்தியன் வங்கி அணிகள் மோதின. இந்த மோதலில் தெற்கு ரயில்வே 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தெற்கு ரயில்வே அணி தரப்பில் தினேஷ் குமார் 2 கோல்களும் (25 மற்றும் 44-வது நிமிடங்கள்), மகேந்திர சிங் (12-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
அக்.10-ல் ஐஎஸ்எல் தொடக்கம்
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 163 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. வழக்கமான முறையில் உள்ளூர் மைதானம், வெளிமாநில மைதானம் பாணியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஜாம்ஷெட்பூர் அணிக்கு பதிலாக சர்ச்சில் பிரதர்ஸ் அணி சேர்க்கப்பட்டுள்ளது. பெங்களூரு எஃப்சி, சென்னையின் எஃப்சி, சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி, எஃப்சி கோவா, இன்டர் காஷி எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட், மும்பை சிட்டி எஃப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, ஒடிசா எஃப்சி, பஞ்சாப் எஃப்சி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி ஆகிய 13 அணிகள் இந்த லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
55 ரன்களுக்கு சுருண்டது பாக். அணி
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 18.1 ஓவர்களில், 55 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஷவால் ஜுல்ஃபிகர் 14, முனீபா அலி 13 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. இந்திய மகளிர் அணி தரப்பில் சரணி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். தீப்தி சர்மா 2 விக்கெட்களையும், ஷபாலி வர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 56 ரன்கள் இலக்குடன் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.