

புதுடெல்லி: எரிபொருள் தட்டுப்பாட்டால் பரிதவித்து வரும் இலங்கைக்கு 38,000 டன் பெட்ரோல், டீசலை இந்தியா வழங்கி உள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்த நாட்டில் புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 15 லிட்டர் பெட்ரோல், இரு சக்கர வாகனத்துக்கு ஒரு வாரத்துக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
போர் காரணமாக நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்பட்டு இலங்கையின் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கி உள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்தியா வழங்கியது.
இந்தியாவின் விரைவான உதவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறினார்.