

சென்னை: கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வேயில் பயணிகள் சேவை மற்றும் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2025-26-ம் நிதி ஆண்டில் இந்திய ரயில்வேயில் ஒட்டுமொத்த மண்டலங்களிலும் பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே ரூ.8,271.47 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.735.78 கோடி (9.8%) அதிகமாகும். மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே 2, 3-வது இடங்களை பிடித்துள்ளன.
தெற்கு ரயில்வேயில் 229 சிறப்பு ரயில்கள் மூலம் 2,513 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. 32.97 லட்சம் பேர் பயணித்துள்ளனர். ஒரு பயணத்துக்கு சராசரியாக 1,312 பயணிகள் வீதம் பயணித்து, தெற்கு ரயில்வே தேசிய அளவில் (சராசரி 894) முதலிடம் வகிக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும்விட, முன்பதிவு ரயில்களில் அதிக இடங்கள் நிரப்புதல் விகிதத்தைப் பெற்று, தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட ஒட்டுமொத்த முன்பதிவு ரயில்களில் 96 சதவீதம் ரயில்கள், 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டு இயங்கியுள்ளன.
கடந்த நிதி ஆண்டில் இயக்கப்பட்ட மொத்தம் 2.6 லட்சம் ரயில் பயணங்களில் (Trips), சுமார் 2.49 லட்சம் பயணங்கள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான மிகச்சிறந்த பயணிகள் இடங்கள் நிரப்புதல் விகிதத்தைக் கொண்டிருந்தன. இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த சராசரி இடங்களை நிரப்புதல் விகிதம் 87 சதவீதமாக உள்ள நிலையில், தெற்கு ரயில்வே அதைவிட அதிகமாக 96 சதவீதம் பெற்றுள்ளது. சிறப்பான திட்டமிடல் மற்றும் பயணிகள் தேவைக்கேற்ப ரயில்களை இயக்கியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.