புதுடெல்லி: இந்தியா - தென் கொரியா இடையேயான இருதரப்பு உறவை, எதிர்கால கூட்டாண்மை (futuristic partnership) நிலைக்கு உயர்த்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
தென் கொரிய அதிபர் லீ ஜே மையுங் அரசு முறைப் பயணமாக நேற்று புதுடெல்லி வந்தடைந்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் இந்திய பயணம் இது. விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதையடுத்து, தென் கொரிய அதிபரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய தென் கொரிய அதிபர், பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி - தென் கொரிய அதிபர் லீ ஜே மையுங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை எதிர்கால கூட்டாண்மை (futuristic partnership) நிலைக்கு உயர்த்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டது.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா–தென் கொரியா சிறப்பு உத்திசார் கூட்டாண்மையில்(Strategic Partnership) ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
வர்த்தகம், நிதிச் சேவைகள், கப்பல் கட்டுமானம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, குறைக்கடத்திகள், முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பொருளாதாரம், வர்த்தகம், கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறை, டிஜிட்டல் துறை, முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்த முடிவுகள் நமது இருதரப்பு கூட்டாண்மைக்கு மேலும் புத்துயிர் அளித்து, நமது மக்களுக்கும் தொழில்துறைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தனதாக தெரிவித்துள்ளது.