

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்
ஜிப்ராலியோன்: இஸ்ரேல் உடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ சான்செஸ், “இஸ்ரேல் உடனான தனது கூட்டமைப்பை இந்த செவ்வாய்க் கிழமைக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவை ஸ்பெயின் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கும்.
ஸ்பெயின், இஸ்ரேலின் நண்பன்தான். ஆனால், அந்த நாடு தனது நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே, ஸ்பெயின் முன்னெடுக்கும் இந்த கோரிக்கையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. நாடுகளுக்கு இடையேயான உறவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கான மரியாதை மிகவும் முக்கியம்.
இவ்விஷயத்தில் இஸ்ரேல் இதை கருத்தில் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இஸ்ரேலின் உறவுக்கு அடிப்படையாக இருக்கும் ஒப்பந்தத்தின் பல விதிகளை அந்த நாடு காலில் போட்டு மிதிக்கிறது. எனவேதான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ராஜதந்திர போரை ஸ்பெயின் நடத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் தற்போதைய நிலைப்பாட்டை இதற்கு முன் பெல்ஜியம், சுலோவீனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஆதரித்தன. அதேநேரத்தில், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லுத்வேனியா ஆகிய நாடுகள் எதிர்த்தன.
இஸ்ரேல் - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக மதிப்பு 45 பில்லியன் யூரோவுக்கும் அதிகம். எனவே, இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தத்தை நிறுத்துவதோ அல்லது முறிப்பதோ பெரும் பொருளாதார மற்றம் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.