

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging) வரும் நவம்பர் 10-ம் தேதி ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இதில் அவரது குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் அரசியல் பிரவேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, இந்நூலை வெளியிடவிருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பின்வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பகுதிகளை நீக்க அரசு அழுத்தம் கொடுத்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். “இது ஜனநாயக படுகொலை” என்று அவர் விமர்சித்தார்.
இதை மறுத்த பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, இது சுயசரிதையா அல்லது புனைக்கதையா என்பதைப் பதிப்பகமே முடிவு செய்யும் என்றார். பதிப்பகத் திருத்தத்தின் போது ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சோனியா காந்தி தரப்பே ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றதாக பென்குயின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஒப்பந்த விதிகள் மற்றும் ஆசிரியரின் ரகசியத்தைக் காக்கும் கடமை இருப்பதால், இந்த முரண்பாட்டுக்கான காரணங்களை வெளியிட முடியாது என பென்குயின் நிறுவனம் கூறிவிட்டது.