

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ல் மானை வேட்டையாடியதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
மானை வேட்டையாடியதன் முலம் பிஷ்னோய் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கூறி சல்மான் கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.
அவருடன் நெருக்கமாக இருக்கும் பிற பாலிவுட் நடிகர்களையும் குறிவைத்து வருகிறது. இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த தேடப்படும் ரவுடியான ஹரி பாக்ஸர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
மும்பையில் பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் இல்லத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் ஹரி பாக்ஸரின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தன.
அவரை இந்தியாவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் பிரபலங்கள் ரோஹித் ஷெட்டி, துஷார் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளில் ஹரி பாக்ஸர் முக்கியக் குற்றவாளி ஆவார்.
கடந்த மாதம், நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் ஹரியானா சிறப்பு அதிரடிப் படை வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளால் ஹரி பாக்ஸர் கைது செய்யப்பட்டார்.