

புதுடெல்லி: நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு இணைந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் வாங்சுங்கை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அநீதிகளை தடுக்க வேண்டும். என்னை வலுக்கட்டாயமாக சிறை வைத்து உள்ளனர்.
இதுபோன்ற அநீதிகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். தற்போது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முறைப்படி அனுமதி பெறவில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நாடாளுமன்ற வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. எங்கள் அரணை மீறி நாடாளுமன்றம் நோக்கி முன்னேறுவோர் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தன.