நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

விலைவாசி, நீட் முறைகேடு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம்
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
Updated on
2 min read

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்​டு, சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் உள்​ளிட்ட பிரச்​சினை​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13-ம் தேதி வரை நடக்க உள்​ளது. நாட்​டில் உயர்​கல்​வியை நிர்​வகிக்க தனித்​தனியே செயல்​படும் யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்விக் குழு​மம் ஆகிய​வற்றை கலைத்​து​விட்​டு, ‘இந்​திய உயர்​கல்வி ஆணை​யம்’ அமைக்க வகை செய்​யும் ‘விக்​சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்​டான்’ மசோதா மற்​றும் வெளி​நாட்டு பங்​களிப்பு ஒழுங்​கு​முறை திருத்த மசோதா ஆகியவை ஏற்​கெனவே நிலு​வை​யில் உள்​ளன. அவற்றை இந்த கூட்​டத்​தொடரில் மீண்​டும் அறி​முகம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

மேலும் வரு​மான வரி, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எண்​ணிக்​கை, பிறப்பு - இறப்பு பதிவு, குறு, சிறுதொழில் மேம்​பாடு தொடர்​பான திருத்த மசோ​தாக்​கள் மற்​றும் ‘வந்​தே ​மாதரம் பாடலை அவம​தித்​தால் 3 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க வகை செய்​யும் தேசிய கவுரவ திருத்த மசோதா ஆகிய​வற்​றை தாக்​கல் செய்யவும் மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற பட்​ஜெட் தொடரில் மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​கான மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன. மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் மசோ​தாக்​கள் தோல்வி அடைந்​தன. இந்த மசோதாக்களை மழைக்​கால கூட்​டத் தொடரின்போது மக்​களவை​யில் மீண்டும் தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்கிடையே, நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் பல்​வேறு விவ​காரங்​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன. நீட் தேர்வு முறை​கேடு​களுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்​பட்​டது தொடர்​பாகவும் எதிர்க்​கட்​சிகள் போராட்​டம் நடத்தி வரு​கின்றன.

இதுபற்றியும் பிரச்​சினை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன. இது மட்​டுமின்​றி, அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் விலை உயர்​வு, நாட்​டின் வெளி​யுறவுக் கொள்கை, நீட் முறைகேடு தொடர்பாக சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்தி வருவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்​கட்​சிகள் வியூகம் வகுத்துள்​ளன.

பிரதமர், முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் ஆகியோர் குற்ற வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்டு 30 நாட்​களுக்கு மேல் சிறை​யில் இருந்​தால் அவர்​களை பதவி நீக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த மசோதா நாடாளு​மன்ற கூட்​டுக் குழு​வின் ஆய்​வுக்கு அனுப்​பப்​பட்​டது.

‘உறுப்​பினர் பதவிக்கு பாதிப்பு இல்​லாமல் தற்​காலிக​மாக பதவி நீக்​கம் செய்​ய​லாம். நீதி​மன்​றத்​தால் நிரப​ராதி என விடு​தலை செய்​யப்​பட்​டால் மீண்​டும் பதவி​யேற்​றுக் கொள்​ளும் வகை​யில் மாற்​றங்​களை செய்​ய​லாம்’ என்று கூட்​டுக்​குழு பரிந்​துரைத்த​தாக கூறப்​படு​கிறது. இந்த மசோ​தாவை கடுமை​யாக எதிர்க்க எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

‘‘கூட்​டத்​தொடரில் 19 அமர்​வுகள் நடை​பெறும். மாநிலங்​களவை​யில் வந்தே மாதரம் மசோ​தாவை உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இன்று தாக்​கல் செய்​வார்’’ என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்குமா?

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. தற்போது மக்களவையில் 540 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதாக்களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், சிவசேனாவின் உத்தவ் அணியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் சமீபத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இதனால், மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் சரத்பவார் அணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in