

நாசிக்: நாசிக்கில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி, சிவசேனா நடத்திய போராட்டம் வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிவசேனா (யுபிடி) இளைஞர் அணி மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே, நிபாட் நகர பஞ்சாயத்து தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்துக்கு சென்று அவரது மேசை மீது நாய்களை அவிழ்த்து விட்டார்.
இதுகுறித்து, ரந்தாவே கூறியதாவது: நாசிக்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தக் கோரி கடந்த 6 மாதங்களாக நிபாட் நகர பஞ்சாயத்து தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஒரு குழந்தையை நாய் கடித்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவரது மேசை மீது 2 நாய்களை விட்டேன். இது கடைசி எச்சரிக்கை. 8 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மேலும் பல நாய்களை கொண்டுபோய் விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.