

சண்டிகர்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்ளது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த ) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. போதிய ஆதரவு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் பாஜக தரப்பில் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரப்படுகிறது. இந்த சூழலில் பஞ்சாபின் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து சுக்பீர் சிங் பாதல் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் கூட்டம் சண்டிகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சீக்கிய குருக்களின் வழிகாட்டுதல்களின்படி பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை சிரோமணி அகாலி தளம் முழுமனதுடன் ஆதரிக்கிறது. இதேபோல நேர்மையான, சரிசமமான தொகுதி மறுவரையறையையும் ஆதரிக்கிறோம். அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. எனவே தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பேரவைத் தேர்தல்
கடந்த 1996-ம் ஆண்டில் சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி கடந்த 1997-ம் ஆண்டில் பஞ்சாபில் ஆட்சி அமைத்தது. கடந்த 2007, 2012-ம் ஆண்டுகளிலும் பஞ்சாபில் இதே கூட்டணி ஆட்சி நீடித்தது.
கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி உடைந்தது. கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்த சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் ஒரு பகுதியாகவே சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.