

மும்பை: சிவசேனா (உத்தவ்) கட்சியிலுள்ள 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்தன.
அந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சிவசேனா (உத்தவ்) கட்சி கடிதம் எழுதவுள்ளது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் அந்த 6 பேரும் சேரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியிலிருந்து விலகி செயல்பட்டு வரும் அந்த 6 பேரும் வெட்கமில்லாத, நன்றி கெட்ட, ஊழல் பேர்வழிகள்.
அவர்கள் தங்கள் ‘நற்பெயரையும் குடும்பப் பெயர்களையும்’ பணயம் வைத்து, ‘வெட்கமின்றி’ தங்களைத் தாங்களே விற்பனை செய்துள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற உதவியவர்களை அந்த எம்.பி.க்கள் காட்டிக் கொடுத்து விட்டனர். கட்சிக்கு துரோகம் இழைத்த அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.