

பாட்னா: பிஹார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஒருவர், நோயாளி ஒருவருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் சஞ்சய் தத், தனது தந்தையின் ஆசைக்காக மருத்துவர் போல நடித்திருந்தார். அது சினிமா ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் செக்யூரிட்டி செய்த வேலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பகாகா மருத்துவமனைக்கு அருகே நடந்த டெம்போ, வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேனில் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அப்போது, மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர் நோயாளியின் காயத்தை தையலிட்டு பேண்டேஜ் வைத்துக்கட்டியுள்ளார். இதனை அந்த ஆம்புலன்ஸ் வேன்டிரைவர் வாசிம் அக்தரும், காயமடைந்த சுரேந்திர பாசி என்பவரும் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இது குறித்து, பகாகா மருத்துவமனை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி கூறும்போது, “இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் இல்லை. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கள், கட்டுப்போடும் ஊழியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
இருக்கும் ஊழியர்களை வைத்து மருத்துவமனையை நடத்தி வருகிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்கள் வந்தபோது ஒருவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தது. இதையடுத்து டாக்டர் ஒருவரின் மேற்பார்வையில்தான் அவர் தையல் போட்டார்” என்றார்.