

புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது அந்நியச் செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பேசியதாவது: இந்தியாவிடம் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு (எல்பிஜி), பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இதில் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் சுமார் 90 % பாதிக்கப்பட்ட பிராந்தியத்திலிருந்து வருகிறது.
ஆனால் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கும் வகையில் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் அனைத்து வகையான எரிபொருள் விநியோகமும் போதுமான அளவில் இருப்பதால், மக்கள் பீதியடைந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரதமரின் சமீபத்திய வேண்டுகோள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற காலங்களில் நாட்டின் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 10 வேண்டுகோள்: ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் முன்வைத்த 10 முக்கிய வேண்டுகோள்: பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டும், தனியார் வாகனங்கள் தேவைப்பட்டால் 'கார் பூலிங்' முறையைப் பயன்படுத்த வேண்டும், சரக்கு போக்குவரத்துக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டும், மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்த வேண்டும், முடிந்தவரை மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும், கரோனா காலத்தைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.
காணொலி கூட்டங்களை நடத்த வேண்டும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டில் திருமண நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும், உள்நாட்டு சுற்றாலாவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், தேவையின்றி தங்கம் வாங்குவதை தள்ளிப் போட வேண்டும், தினமும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் உட்பட இந்தியாவில் தயாரான பொருட்களை பயன்படுத்த வேண்டும், சமையல் எண்ணெய் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்." என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.