

புதுடெல்லி: தங்கம் வாங்காதீர், வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதியுங்கள் என்பன உள்ளிட்ட பிரதமர் மோடியின் கோரிக்கை தோல்விக்கான சான்று என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் சில தியாகங்களை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோலை குறைவாகப் பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள், மெட்ரோவைப் பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என அவர் வலியுறுத்தி உள்ளார். இவை வெறும் போதனைகள் அல்ல, மத்திய அரசின் தோல்விக்கான சான்று.
கடந்த 12 ஆண்டுகளில் அவர் நாட்டை இத்தகைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். இப்போது மக்களிடம் எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், அவர்கள் பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்பதற்கு பதில் அதிலிருந்து தப்பிப்பதற்காகப் பொறுப்பை மக்கள் மீது மாற்றுகிறார்கள். இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.