

சஞ்சார் சாத்தி செயலி
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றம் தொடங்கி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வரை எதிர்ப்பு அலைகளைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சைபர் பாதுகாப்புக்காக மத்திய அரசு பிரத்தேயகமாக உருவாக்கியுள்ள சஞ்சார் சாத்தி செயலியை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நவம்பர் 28 தொடங்கி 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன, ஏன் அதற்கு இத்தகைய எதிர்ப்பு, செல்போன் நிறுவனங்கள் சொல்வது என்ன, மத்திய அரசின் நிலைப்பாடு ஆகியனவற்றை சற்றே தெளிவாகப் பார்க்கலாம்.
சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?
சஞ்சார் சாத்தி செயலி என்பது மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள செயலி. இது ஆப் மற்றும் வெப் போர்டல்களில் பயன்படுத்தக்கூடியது. இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளும் பயனர் தங்களது டிஜிட்டல் அடையாளத்தை நிர்வகிக்க முடியும். சந்தேக நடவடிக்கைகள் குறித்து புகார் செய்ய இயலும். மேலும், இந்தச் செயலி தொலைதொடர்பு பாதுகாப்பு, சைபர் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. இதனால், இது சேவை மற்றும் விழிப்புணர்வு செயலியாக இருக்கும். இதனை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம்.
மத்திய அரசு பட்டியலிடும் சஞ்சார் சாத்தியின் அம்சங்கள்:
1. சக்சு (Chaksu) என்றொரு சேவை இதில் இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், போலி கேஒய்சி அலர்ட்கள், ஆள்மாறாட்ட மோசடிகள், பணப்பறிப்பு லிங்குகள் பற்றி புகாரளிக்கலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தகைய சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படும் விதங்களை அடையாளம் காண முடியும். இருப்பினும், இணையவழி நிதி முறைகேடுகளுக்கு 1930 என்ற எண்ணை அல்லது cybercrime.gov.in. இணையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும்.
2. தேவையற்ற வணிக அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி - சஞ்சார் சாத்தி ஆப் மூலம், தேவையற்ற வணிக ரீதியலான அழைப்புகளைப் பற்றி ரிப்போர்ட் செய்து தடுக்கலாம். டிராய் (TRAI) விதிமுறைகளை மீறி வரும் அழைப்புகளை அது வந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் ரிப்போர்ட் செய்தால் நடவடிக்கை உறுதி. அதேபோல் போலியான லிங்குகள், செயலிகள் பற்றியும் பாதுகாப்பற்ற இணையதளங்கள் பற்றியும் புகார் செய்யலாம்.
3. மொபைல் இணைப்புகளை கணக்கில் கொள்ளலாம்: இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் தனது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் உள்ளன என்பதை அறியலாம். இதன்மூலம் நமக்கே தெரியாமல் நம் பெயரைப் பயன்படுத்தி ஏதேனும் இணைப்புகள் பெறப்பட்டிருந்தால் அதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கலாம்.
4. திருடுபோன / தொலைந்த போன் சேவைகளை தடுக்கலாம்: ஒருவேளை நம் செல்போன் தொலைந்து போனால் அல்லது திருடுபோனால் இந்த செயலியின் மூலம் IMEI எண்ணை முடக்கி வைக்கலாம். போன் திரும்பக் கிடைத்தால் IMEI எண்ணை அன்ப்ளாக் செய்து கொள்ளலாம். அதேபோல், செகண்ட் ஹேண்ட் செல்போன்கள் வாங்கும்போது IMEI எண் அசலானதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
5. போலி சர்வதேச கால்கள்: அதேபோல், +91 என்ற டயலிங் கோட் கொண்டு வரும் சர்வதேச அழைப்புகள் வரும்பட்சத்தில் அவற்றை ரிபோர்ட் செய்ய இயலும்.
6. இணைய சேவை வழங்குநரை அறியலாம்: சஞ்சார் சாத்தி செயலி மூலம் பயனர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள இணைய சேவை வழங்குநரை பின்கோடு பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
7. உண்மைத் தன்மையை அறியலாம்: முக்கியமாக இந்தச் செயலி மூலம் பயனர்கள் வங்கிகள், பிற நிறுவனங்களின் உண்மையான கஸ்டமர் - கேர் சர்வீஸ் எண்கள், இ-மெயில்கள், இணையதளங்கள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ப இந்த செயலி ஒரு ட்ரைக்டரியை உள்ளடக்கியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் சஞ்சார் சாத்தி செயலியை அனைவரும் தயக்கமின்றி டவுன்லோடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.
இந்தியாவில் 120 கோடி செல்போன் பயனர்கள் உள்ளனர். இங்கு செல்போன் திருட்டு தொடங்கி அதன்வாயிலாக நிகழும் சைபர் குற்றங்கள் வரை பிரச்சினைகள் ஏராளம். சஞ்சார் சாத்தி செயலி மூலம் ஒரு வருடத்துக்குள் 7 லட்சம் தொலைந்து போன போன்கள் கண்டறியப்பட்டுள்ளன, அக்டோபர் மாதம் மட்டும் 50 ஆயிரம் போன்கள் இந்த செயலி பயன்பாட்டால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பரிந்துரைக்கிறது.
எதிர்ப்பு ஏன்? - மத்திய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருக்கிறது. அதுவும் ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. தங்கள் பயனர்களின் பிரைவசி உள்ளிட்ட காரணிகளை முன்வைத்து, சஞ்சார் சாத்தி செயலி விவகாரத்தில் தயக்கம் காட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகக் கூறுகிறது.
ஆப்பிள் நிறுவனம், தான் உருவாக்காத செயலிகள் அது அரசு செயலியாகவே இருந்தாலும் அதன் தயாரிப்புகளுக்குள் வலுக்கட்டாயமாக புகுத்த அனுமதிப்பதில்லை. அது அந்நிறுவனத்தின் கொள்கை முடிவாகவே இருக்கிறது. ஆப்பிள் மட்டுமல்ல, மத்திய அரசின் இந்த உத்தரவு மற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரைவசி சார்ந்த உரிமைக் குரல் எழுப்புவோர், இவ்வாறாக ஒரு செயலியை செல்போனில் முன்கூட்டியே ஸ்டோர் செய்வதன் மூலம், அந்த டிவைஸை வாங்குவோர் மீது செயலி நிச்சயம் கட்டுப்பாடு கொள்ளும். தனிநபரின் விவரங்கள் சேகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. பயனர் டேட்டா கையாளப்படக் கூடிய விதம் குறித்தும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. என்னதான் அரசு பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டினாலும் கூட தனிநபர் சுதந்திரம் முக்கியம்.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மக்களை உளவு பார்க்கும் முயற்சி என அவை விமர்சித்துள்ளன. சஞ்சார் சாத்தி பிரச்சினை குறித்து விவாதிக்க பிற அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில், “பெரிய அண்ணன் நம்மை கண்காணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விளக்கம்: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சஞ்சார் சாத்தி செயலியை ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிதாக வர உள்ள ஸ்மார்ட்போன்களில் அந்த செயலி டீஃபால்டாக இருக்கும். வேண்டும் என்போர் அதனை அப்படியே வைத்துக்கொள்ளலாம். வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை டெலீட் செய்யலாம். இது பயனர்களின் முடிவுக்கு உட்பட்டது.
இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அரசின் கடமை. அதை தங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதாக இல்லையா என்பது பயனர்களின் முடிவைப் பொறுத்தது. விற்கப்படும் போன்கள் முறைப்படியானதா என்பதை சரிபார்க்கவும், போன் தொலைந்து போனால் அதனை கண்காணிக்கவும் இந்த செயலியை அரசாங்கம் ஒரு வழிமுறையாக முன்மொழிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.