

எனது கம்போடியா பயணக் கட்டுரையின் போது அங்கு செல்பவர்கள் வியட்நாமையும் சேர்த்து திட்டமிடலாம் என்று கூறியிருந்தேன். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரு நாடுகளையும் பார்த்த மாதிரியும் இருக்கும்; நேரமும் செலவும் நிறையவே மிச்சம் என்று தெரிவித்திருந்தேன்.
கம்போடியாவின் பெரும்பாலான நகரங்களில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹோ- சி- மின் (HO- CHI - MIN) மற்றும் பிறபகுதிகளுக்கு செல்ல குளிரூட்டப்பட்ட வைஃபை வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்தில் வியட்நாம் சென்றடையலாம்.
சுற்றுலா என்பதற்கான வேறு இலக்கணத்தையும் கொண்ட நாடு வியட்நாம் என்றால் அது மிகையல்ல. சுதந்திரப் போராட்டத்தில் அமெரிக்காவையே திணறடித்த நாடு அது. வீட்டுக்குப் போகாமல் இங்கேயே இருந்து விடலாம் என்று தோன்றச் செய்யும் PHU QUOC தீவு, பழங்குடிகளின் பகுதியான CU CHI என அனைத்து வகை, சுற்றுலாக்களின் கலவையைக் கொண்டது இந்நாடு.
இதன் தலைநகர் ஹோ- சி- மின்-னின் அழகு , ஷாப்பிங் மால், வானவில் கட்டிடங்கள் என்று கண்களை அள்ளிக் கொள்ளும் கவர்ச்சி இந்நாட்டுக்கு உண்டு. இருப்பினும் மன நிறைவோடு ஷாப்பிங் செய்ய BEN THANH மார்க்கெட் சிறந்த இடம். வியட்நாமின் உள்ளூர் பொருட்கள் இங்கு கிடைக்கும். அழகாக பேரம் பேசியும் வாங்க முடியும்.
தலைநகர் ஹோ -சி-மின்-னில் en தாங் மார்க்கெட் ஒட்டுமொத்த ஷாப் பிங்கும் சிறந்த இடம் என்று அறியப் பட்டாலும் சுற்றுலா பயணிகளுக்கான விலை ஏற்றம் இங்கு நிறையவே உண்டு. எனவே இந்த மார்க்கெட் தவிர பிராண்ட் பொருட்கள் வாங்க Taka plaza மற்றும் சைனா டவுன் பகுதியில் உள்ள an dong market என்று உங்கள் பர்ஸை காலி பண்ண இங்க நிறைய இடங்கள் உள்ளன.
உலகத் தரம் வாய்ந்த ஆடை ஏற்றுமதிக்கும் இந்நாடு புகழ் பெற்றது. உலகின் மிகச்சிறந்த பிராண்டுகள் இங்கு கிடைக்கும். இவை தாண்டி தெரு
வெங்கும் மண்டி கிடக்கும் Restro pub-கள், கைகளில் மது கோப்பைகளோடு தெருவை வேடிக்கை பார்த்தவாறு அமைந்திருக்கும். கூடவே தரமான மசாஜ் கிளப்களும் உண்டு. இதைப் பார்த்துக்கொண்டிருக்க மாலை நேரம் போதாமல் போய்விடும்.
மாலை நேரப் படகு சவாரி: தலைநகரில் நீங்கள் தவற விடக் கூடாத ஒன்று, நிகான் நகரின் மாலை நேரப் படகு சவாரி. படகு சவாரி என்றால் ஏதோ சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அனைத்தும் Luxury cruise-க்கு இணையானவை. buffet dinner நடனம், பாடல், இவை தாண்டி படகு சவாரியின் போது விளக்கு ஒளியில் ‘ஹோ- சி- மின்’-ன்னின் மற்றொரு முகம் உங்கள் வியட்நாம் பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக ஆக்கிவிடும்.
இதைத் தவிர தலைநகர் மற்றும் பல பகுதிகளில், 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் இருக்கிறது. அப்போது குடியேறிய தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் அது. நம்மூர் ஸ்டைலில் அமைந்திருக்கிறது இக்கோயில். இதுவும் அங்கு காண வேண்டிய இடம்.
சைகோன் ட்ரெயின் ஸ்ட்ரீட்: எவ்வளவு இடங்கள் சுற்றினாலும் வியட்நாமில் நீங்கள் தவிர்க்கக் கூடாதது சைகோன் ட்ரெயின் ஸ்ட்ரீட். ‘ஐய்யய்யோ.. உடம்புல ஒரசிறும் போலிருக்கே’ என்று பயத்தில் கண்களை மூடி நம்மை அலற வைக்கும் இந்த ட்ரெயின் ஸ்ட்ரீட் அனுபவம் அலாதி த்ரில்.
வியட்நாம் சுற்றுலாவில் பஞ்சம் இல்லாமல் நிறையவே கிடைப்பது Boat ride கள். அவற்றில் நீங்கள் மிஸ் பண்ணக் கூடாதது , Hoi an latern boat ride. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முழு நிலவென்று நகரின் ஒட்டுமொத்த விளக்குகளும் அணைக்கப்படும். மெழுகுவர்த்தி மற்றும் கண்ணாடி விளக்குகளின் வெளிச்சத்தில் கலர்கலராய் ஒளிரும் இந்த நகர் அப்படியொரு அழகு. அந்த நாளில் நீங்கள் படகுகளில் சென்று கண்ணாடி விளக்கு
களை Hoi ஆற்றில் மிதக்க விடலாம். உங்கள் விளக்குகள் மிதக்கும் அழகிலும் ஆற்றிலிருந்து மிளிரும் நகரின் அழகிலும் லயத்துப் போவீர்கள்.
நம்மூர் சாப்பாடு: வியட்நாமின் சுற்றுலா மத்திய, தென் மற்றும் வடபகுதி என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் காண்பதற்கும் அனுபவிப்பதற்கும் நிறையவே உள்ளன. ஆனாலும் குறைந்த பட்சம் 4 நாட்கள் கூட உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி வியட்நாம் சுற்றுலாவைத் திட்டமிடலாம். அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நம்மூர் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது.
வெளிநாட்டில் இருப்பதை அறியாமல் வெளுத்துக்கட்டலாம். வியட்நாம் சுற்றுலாவைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போனாலும் ஆங்காங்கே ஃபுல் ஸ்டாப் வைத்து ஓரிரு இடங்களைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம், அப்படி ஓர் இடம்தான் “TAM COC” ஏரி மற்றும் குகை.
இயற்கை வடித்தெடுத்த சுண்ணாம்பு கல்குகை மற்றும் நிலப்பரப்பு, பச்சை நிறத்தில் வயல்வெளிகள், இவற்றுக்கிடையில் புகுந்து புறப்பட்டு வரும் தென்றலோடு படகு பயணம் என்று இந்த ஏரி, சுற்றுலாவின் வேறு முகம் காட்டுகிறது. இங்குள்ள (Hang Ca, Hang Hai, Hang Ba) என்ற 3 குகைகளையும் சுற்றிப் பார்த்து வர 2 மணி நேர படகு சவாரி தேவைப்படும்.
ஹனோயின் 36 தெருக்கள்: உங்கள் பர்ஸ், பை மற்றும் வயிற்றில் இடமிருந்தால் நீங்கள் மிஸ் பண்ண கூடாத இடங்களில் ஒன்று, தலைநகர் ஹனோயில் உள்ள புகழ் பெற்ற மற்றும் பாரம்பரியமான ‘ஹனோய் ஓல்டு குவார்ட்டர்’ அல்லது ‘ஹனோயின் 36 தெருக்கள்' என்று அழைக்கப்படும் இடம்.
இங்குள்ள குறுகிய தெருக்களுக்குள் புகுந்து புறப்பட்டு வெளியே வருவது டூரிஸ்ட் சீசன்களில் ரொம்பவே சவாலான காரியம். ஆனாலும் இங்கே உள்ள மரபு வழி கடைகள், நம்ம ஊர் நாட்டு மருந்துகள் போன்று வியட்நாமின் நாட்டு மருந்துகள், நினைவு மற்றும் பரிசு பொருட்கள் என இங்கு கிடைக்கும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலா, உணவு, ஷாப்பிங் என்று வியட்நாமில் நீங்கள் அனுபவிக்க விரும்பும் அத்தனை விஷயங்களும் ஒரு சேர கிடைக்கின்றன.
என்ன தொழில் செய்யலாம்? - அகர்பத்தி செய்யும் மெஷின்களின் ஏற்றுமதியில் வியட்நாம் பெரும்பங்கு வகிக்கிறது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என நிறையவே இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகிறது. உலர் பழங்கள், வியட்நாமிலிருந்து உலகெங்கும் நிறைய ஏற்றுமதி ஆகின்றன.
மாம்பழம், பலா, டிராகன் ஃப்ரூட், அன்னாசிப் பழம் என நிறைய ரகங்கள் கிடைக்கின்றன. வியட்நாமின் தட்ப வெட்ப நிலை, அனுபவமிக்க விவசாயிகள், சிறந்த தொழில்நுட்பம் போன்றவை உலர் பழங்கள் ஏற்றுமதிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.
முந்திரி ஏற்றுமதி மற்றும் அதன் செயல்முறை (process) போன்றவற்றிலும் வியட்நாம் சிறந்து விளங்குகிறது. நம் ஊரின் கடலூர் பகுதியில், பல வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பெரும் புயல் பாதிப்பில் முந்திரி தொழில் பெரும் சிக்கலுக்கு உள்ளான போது, நமது நாட்டின் குழு ஒன்று அங்கு சென்று முந்திரி Process பற்றி அறிந்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
இதைத் தவிர எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், காலனிகள், டெக்ஸ்டைல், வேளாண் பொருட்கள் இங்கிருந்து பிற நாடுகளுக்கு நிறையவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உங்கள் மனதிலும் இறக்குமதி வியாபார ஆசை இருந்தால் வியட்நாம் உங்களுக்கான தேர்வாக இருக்கக்கூடும்.
நேரடி விமானம்இல்லை: சென்னையில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமானங்கள் இன்னும் இல்லை. மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் வழியாகவும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கும் சீக்கிரமாபிளைட் விட்டுருவாங்க, ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
CYCLO பயணம்: ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். “TAM COC” பகுதிக்குச் செல்வோர் ஹோட்டலை தவிர்த்து, வீடு போன்ற விருந்தோம்பல் கொண்ட கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கலாம்.
புதுமைகள் எவ்வளவோ வந்து விட்டாலும் சில விஷயங்களில் பழமை பெருமை என்பதற்கான எடுத்துக்காட்டு வியட்நாமில் இன்று உலா வரும் CYCLO அல்லது xich- lo. முன்புறம் நீங்கள் அமர்ந்து நகரின் அழகை ரசிக்க நம்ம ஊர் சைக்கிள் ரிக்க்ஷா போல தோற்றம் கொண்ட இந்த CYCLO-வை பின்னால் அமர்ந்தபடி ஓட்டுகிறார்கள்.
குழுவாகச் சென்று நகர் முழுவதையும் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு இந்த CYCLO பயணம் சுகம். இது தலைநகர் மட்டுமல்லாமல் வியட்நாமின் எல்லா நகரங்களிலும் கிடைக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் சுற்றுலாவைத் தாண்டி உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவித்து மகிழ்பவரா? அப்படியானால் உங்களுக்கு வியட்நாமை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே பிடிக்கும்.
வியட்நாமின் பல பகுதிகளில் உள்ளூர் மக்களோடு தங்கும் வசதி கிடைக்கிறது. அவர்களின் வீட்டு உணவு, கலாச்சாரம், நடனம் என்று ஓரிரு இரவுகள் சுகமாகவே பொழுது போகும்.
சில நேரங்கள் நமது வாகனம் நம்மை டென்ஷன் ஆக்கும்போது, ‘எருமை மாட்டுல சவாரி போனது மாதிரி இருக்கு’ என்று சொல்லுவோம். இங்கே நிஜமாகவே எருமை மாடுகளின் மீது சவாரி செய்யலாம். வியட்நாமின் “ HOI AN” உள்ளிட்ட பகுதிகளில் எருமை சவாரியும் கிடைக்கிறது.
- malaipa@yahoo.in