பிஹார் மாநில முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு

பிஹார் மாநில முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்தில் பாஜக சார்பில் முதல் முறையாக சாம்ராட் சவுத்ரி முதல்வர் பதவியேற்றார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் அரசியல் திருப்பமாக முதல்வர் நிதிஷ்குமார், கடந்த 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார். இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு நேற்றுமுன்தினம் சென்ற நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சையத் அடா ஹஸ்னைனிடம் அளித்தார். அன்றைய தினமே பாஜக எம்எல்ஏ-க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அப்போது, பாஜக.வின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அன்று மாலை ஆளுநரைச் சந்தித்த சாம்ராட் சவுத்ரி தனது ஆதரவு எம்எல்ஏ.க்களின் கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

2 துணை முதல்வர்கள்: அதன்படி பிஹார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அடா ஹஸ்னைன் பதவியேற்பு பிரமாணத்தையும் ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, 2 துணை முதல்வர்கள் பதவியேற்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோருக்கு ஆளுநர் சையத் அடா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிஹார் மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாம்ராட் சவுத்ரி கூறுகையில், ‘‘நிதிஷ்குமார் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்து வந்த திட்டங்கள் அனைத்தும் முன்னெடுத்துச் செல்லப்படும். பிரதமர் மோடி - முதல்வர் நிதிஷ்குமார் மாடலைப் பின்பற்றி பிஹாரில் ஆட்சி நடைபெறும். முதல்வர் பணியை இன்று முதல் தொடர்ச்சியாக நடத்துவேன். பிஹார் மாநிலத்தை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதே எங்களது லட்சியம்’’ என்றார்.

பிஹாரில் புதிதாக பதவியேற்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி, துணை முதல்வர்கள் விஜய்குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநில முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழு​வதும் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in