

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
லக்னோ: மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் தோல்வியை சந்தித்ததால், ஐ-பேக் ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் திட்டத்தை சமாஜ்வாதி கட்சி கைவிட்டுள்ளது.
தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரங்களைத் திட்டமிட இந்திய அரசியல் செயற்குழு (ஐ-பேக்) என்ற ஆலோசனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்க ஐ-பேக் நிறுவனத்துடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்தில், அதன் துணை நிறுவனர் பிரதிக் ஜெயின் மீதான நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட போது, முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி ஐ-பேக் அலுவலகத்தில் அதிரடியாக உள்ளே புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகத் திட்டங்களை எடுத்துச் செல்ல அமலாக்கத் துறை திட்டமிட்டு ரெய்டு நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் திமுக.வும் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சார திட்டங்களை வகுத்ததாகக் கூறப்படுகிறது.
உ.பி.யில் 2027-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள சமாஜ்வாதி கட்சியும் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தது. மேற்கு வங்கம், தமிழகத்தில் ஆளும் கட்சிகள் தோல்வியைச் சந்தித்ததால், ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் திட்டத்தை சமாஜ்வாதி கைவிட்டு, தங்களின் சொந்த வியூகங்களை வகுக்க திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.