

துறவி திரேந்தர் சாஸ்திரி
புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தின் பிரபல இந்து பாகேஷ்வர் தாம் மடத்தின் தலைவர் திரேந்தர் குமார் சாஸ்திரி, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு கருத்து முதன்முறையாக கூறியுள்ளார். ராவணன் சீதையை மட்டுமே திருடினார், நீங்கள் பலகோடி பக்தர்களின் நம்பிக்கையைத் திருடி உள்ளீர்கள் என அவர் கூறியுள்ளார்.
தமது ஆன்மிகப் பிரச்சாரத்தால் பிரபலமடைந்தவர் இளம் துறவி திரேந்தர் குமார் சாஸ்திரி (29). ராமச்சந்திர மானஸ் மற்றும் சிவபுராணம் மீதான இவரது சொற்பொழிவு சர்வதேச நாடுகளில் கவனம் பெற்றது. ம.பி மாநில சத்ரபூர் மாவட்டத்தில் பாகேஷ்வர் தாம் எனும் மடத்தை நிறுவி அதன் தலைவராக உள்ளார்.
சமூக வலைதளங்களிலும் பிரபலமாக வலம் வரும் திரேந்தர் சாஸ்திரியை பல்வேறு சமூக வலைதளங்களில் சுமார் 7.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இவரது யூடியூப் வீடியோ காட்சிப் பதிவுகளை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து வருகின்றனர்.
இந்த அளவிற்கு புகழ்பெற்ற துறவி திரேந்தர் சாஸ்திரி முதன்முறையாக ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து கருத்து கூறியுள்ளார். இந்தோனேசியாவின் ஜாக்கர்தாவில் ஹனுமன் மீதான ஆன்மிகச் சொற்பொழியை நிகழ்த்தும் போது அவர் இதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய இளம் துறவியான திரேந்தர் சாஸ்திரி கூறியதாவது: ராமர் கோயிலின் திருடர்களும் ஒரு வகையில் ராவணர்கள்தான். இவர்களது உருவம் மட்டுமே மாறியுள்ளது. ராமர் கோயில் காணிக்கையில் இருந்து லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை திருடப்பட்டுள்ளது.
ராவணன் சீதையை மட்டுமே திருடினார். ஆனால், இவர்கள் கோடிக்கணக்கானப் பக்தர்களின் நம்பிக்கையைத் திருடி விட்டனர். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் பிடிபடுவார்கள். அவர்களும் பிடிபடுவது உறுதி.
யாருக்கேனும் இது வருத்தத்தை அளிப்பதாக இருந்தால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: ராவணன் அன்னை சீதையை கவர்ந்து கொண்டு சென்றான். அதன் விளைவாக அவனது ஒட்டுமொத்த குடும்பமும் அழிந்தது.
ராமர் கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அளித்த நன்கொடையைத் திருடுபவர்கள் அரசாங்கத்தின் தண்டனையை எதிர்கொள்வார்கள். ஆனால், அவர்கள் கடவுளிடமிருந்து கடுமையான தண்டனையைப் பெறுவதும் உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.