

சமாஜ்வாதி எம்.பி எஸ்.டி.ஹசன்
புதுடெல்லி: இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்ரீத் நேற்றே கொண்டாடப்பட்டது. வழக்கமாகப் பக்ரீத் சிறப்பு தொழுகையின் போது மசூதிக்குள் போதுமான இட வசதி இருப்பதில்லை. அதனால், மசூதிக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்தனர். தற்போது இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் வருவோரை சமாளிக்க சுழற்சி முறையில் தொழுகை நடத்தலாம் என்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவுறுத்தி இருந்தார்.
இதேபோல், பாஜக ஆளும் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்ரீத் நாளான இன்று, அரசு விதிகளை மீறி சாலைகளில் தொழுகை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிரோன்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், உ.பி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் முராதாபாத் தொகுதி எம்.பி. எஸ்.டி.ஹசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாடுகள் குறித்த சட்டங்கள், விதிமுறைகள் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். பக்ரீத் தொடர்பான அறிவிப்புகள், இந்து சகோதரர்களின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. முராதாபாத் பகுதியிலும் கடந்த 2 ஆண்டுகளாகச் சாலைகளில் தொழுகை நடத்துவதில்லை. தற்போது, ஈத்கா வளாகத்துக்கு உள்ளேயே சுழற்சி முறையில் தொழுகை நடத்தப்படுகிறது.
ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் இந்த சிறப்பு தொழுகைக்கு ஏன் எதிர்ப்பு ?. பொது மக்களின் போக்கு வரத்துக்காகவே சாலைகள் பயன்பட வேண்டும். ஆனால், மக்கள் சாலைகளிலேயே தங்கள் வாழ்வாதாரத்துக்கான தொழில்களை செய்கின்றனர். வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுபவர்கள் முதல் ஏழை, எளிய மக்கள் வரை, தங்கள் பொருட்களைச் சாலைகளிலேயே வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர். அதுவே அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது முறையல்ல.
தவிர, விசேஷ நாட்களில் இலவச உணவு வழங்கும் கூடாரங்கள் மற்றும் பல்வேறு வகையான மதச் செயல்பாடுகள் சாலைகளிலேயே நடைபெறுகின்றன. ‘காவடி யாத்திரை' போன்ற நிகழ்வுகளுக்காகச் சாலைகள் மாதக் கணக்கில் மூடப்படுகின்றன. இதனால் அவ்வழியே செல்பவர்களுக்குப் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சட்டங்கள் இயற்றப்பட்டால், அவை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதாக இருக்கக் கூடாது.