

புதுடெல்லி: நாடாளுமன்றம் உள்ளிட்ட மக்கள் மன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான அரசின் முனைப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் பாராட்டி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்து வந்த மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. 2029-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் அதையடுத்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் முடிவை, நாடு முழுவதும் உள்ள பெண்கள் பாராட்டி வருகின்றனர்.
அடுத்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூடவுள்ளது. இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளேன். இது தொடர்பாக அவையில் விவாதிக்க உள்ளோம். வளர்ந்த பாரத கட்டமைப்பு சார்ந்த பங்களிப்புக்கான வாய்ப்பாக இதை பெண்கள் பார்க்கின்றனர்.
நம் தேசத்தின் பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களது தடத்தை பதித்து வருகின்றனர். இசை, இலக்கியம், கலை, சினிமா, விளையாட்டு, புத்தொழில் என சாதனை படைக்கின்றனர். அது இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த துறைகளை போலவே மக்கள் மன்றத்திலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொடர்பான கருத்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை அமல்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த சட்டத்தை இயற்றுவதில் இனியும் தாமதம் ஏற்பட்டால் அது நம் தேச பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்த சட்டத்தை இயற்ற நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் ஆசியை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் உங்களது உள்ளூர் எம்.பி-க்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு கோர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.