

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான இடஒதுக்கீடுகளால் மாணவர்கள் மன அழுத்ததுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் தற்கொலைகள் நிகழ்கின்றன” என்று காரசாரமாக அவர் வாதிட, அடுத்தடுத்த 10-க்கும் மேற்பட்ட ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றார். ஹர்ஷ் துபே இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அனுமதி கோரி வருகிறார்.
இதற்கிடையில், நாட்டில் ஆங்காங்கே Reservation Hatao Andolan (RHA) ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்க’ என்று போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இதே பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கமும் உருவாக்கப்பட்டு அதற்கு 5.9 மில்லியன் ஃபாலோயர்களும் இருக்கின்றனர். கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ என்ற முழக்கத்துடன் முதல் போராட்டம் களம் கண்டது.
அதன்பின்னர் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனாவினர் போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையுடன் அவர்கள் வீதிகளில் திரண்டு சற்று ஆக்கிரோஷமாகக் கோஷமிட, போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக் களத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கர்னி சேனாவினர் அவர்களின் குல தெய்வத்தின் சாட்சியாக சபதம் எடுத்துள்ளனர்.
இப்படியாக இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் இணையதளத்திலும், களத்திலும் வலுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சிஜேபி போல் இன்னமும் இந்த இயக்கம் ஓரணியாகத் திரளவில்லை.
இந்தச் சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி, அதற்குத் தலைமையேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார் ஹர்ஷ் துபே. அவருக்கு கல்வியாளர் ஆனந்த் ரங்கநாதன், பத்திரிகையாளர் அஜீத் பார்தி, எழுத்தாளர் - இயக்குநர் அனுராதா திவாரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை என்ன?
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் பிரதானக் கோரிக்கை. கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும், இன்னும் பிற சூழல்களிலும் தங்களின் உரிமை பறிபோகிறது என்கின்றனர் அவர்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் யுஜிசி விதிமுறைகள் 2026-ன் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டுவரப்பட்ட புதிய சமத்துவ விதிமுறைகளை (UGC equity regulations) எதிர்த்து போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கலாம். உயர் சாதியினர் இந்த விதிமுறை அநியாயமானது, உயர் சாதியினரை திட்டமிட்ட குறிவைக்கக் கூடியது, கருப்புச் சட்டம் என்றெல்லாம் வெகுண்டெழுந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் அலிகர், சம்பல், குஷிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர் அமைப்பினர் புதிய யுஜிசி விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை உடனடியாக திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் யுஜிசியின், புதிய விதிமுறைகளுக்கு (Promotion of Equity in Higher Education Institutions) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இப்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் அமைப்பினரும், யுஜிசி விதிமுறைகளை நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர்.
யுஜிசி வழிமுறையின் பின்னணி:
பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தாத்வி ஆகியோரின் தற்கொலையை தொடர்ந்து, அவர்களின் தாய்மார்கள் ராதிகா வெமுலா மற்றும் அபீதா சலீம் தாத்வி ஆகியோர் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நிலையான வழிகாட்டுதலை வகுக்கக் கோரினர்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012-ம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு யுஜிசிக்கு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் ஒழுங்குமுறை 2026' விதிமுறைகளை Promotion of Equity in Higher Education Institutions) யுஜிசி வெளியிட்டது.
இந்த புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி, பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம், இது அவர்களின் கல்வியை பாதிக்கும் எனக் கூறியே பொதுப் பிரிவினர் இதனை எதிர்க்கின்றனர்.
இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இன்ஃப்ளூயன்சர்களும், அறிவுஜீவிகளும், பொது மக்களுக்கும் பிளவுபட்ட பார்வையில் தான் இருக்கின்றனர் என்று கொள்ளலாம்.
ஆனால், இந்தப் போராட்டம் இணையத்திலும், களத்திலும் வலுப்பெறும் விதம் கவனிக்கப்பட வேண்டியது. மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியது.
2027-ல் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவை, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும், அதனைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் உ.பி. தேர்தல் மிக முக்கியம். காரணம் டெல்லியில் யார் ஆட்சி என்பதை உறுதி செய்யும் டிக்கெட் உ.பி.யிடம் தான் இருக்கிறது எனலாம். மேலும், அங்கு தேர்தலின் போக்கை தீர்மானிப்பதில் சாதி மிக மிக முக்கியமானது.
உ.பி.யில் தேர்தல் ரீதியாகவும் இது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு, கடைசியாக உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சி - காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை சுட்டிக்காட்டலாம். அப்போது ராகுல் காந்தியின் "ஜித்னி அபாதி, உத்னா ஹக்" (எவ்வளவு மக்கள் தொகை உள்ளதோ, அந்த அளவுக்கு உரிமை) என்ற முழக்கமும், அகிலேஷ் யாதவின் பிச்டா, தலித், ஆதிவாசி (PDA) பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடிகள் உள்ளடக்கிய சமூக கூட்டணிக்கான அணுகுமுறையும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தன. அது தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.
சாதியும் இந்திய தேர்தல் களமும் இப்படி ஒன்றிணைந்து இருக்க, ஜூலை 30-ல் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ இயக்கத்தின் முதல் பேரணி நாக்பூரில் நடந்தும் இருக்கிறது. அத்துடன் உயர் சாதி வகுப்பினரின் போராட்டம் உ.பி.யின் லக்னோ, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஆந்திராவின் விசாகப்பட்டினம் வரை விரிந்துள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி, சவர்ண மோர்சா, சவர்ண சமாஜ் இயக்கத்தினர் லக்னோவில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாதி வாரி இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும், யுஜிசி விதிகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஜனநாயகத்தால் உயர் சாதியினர் எந்தவித பலனையும் அடையவில்லை என்றனர்.
ஆக.4-ம் தேதி ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா நடத்திய போராட்டத்திலும் இதே கோரிக்கை தான் வலியுறுத்தப்பட்டது.
கூடவே, சாதி அடிப்படையிலான சட்டங்களை மறு ஆய்வு செய்வது, ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு மற்றும் மத்திய அளவில் EWS இடஒதுக்கீடு விதிகளை எளிமையாக்குவது, உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். தொடர்ந்து பாஜக அலுவலகம், முதல்வர் இல்லம் நோக்கிச் செல்ல திட்டமிட்டபோது போலீஸ் தடியடி, தண்ணீர் பீய்ச்சியடித்ததால் கலைந்து சென்றனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் காயமடைந்ததாக குற்றம் சாட்டும் அமைப்பினர், அதனைத் தொடர்ந்துதான் ஜெய்ப்பூர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை என்று உறுதி பூண்டனர்.
அதேபோல் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும் ஜன ஜாகரன சமிதி சார்பில் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ போராட்டத்துக்கு ஆதரவாக மவுனப் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வாய்களில் கருப்புத் துணி கட்டி, கைகளில் சாதிவாரி இடஒதுகீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகள் ஏந்தியிருந்தனர். இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும், இட ஒதுக்கீட்டு சலுகைகளை ஒரு தலைமுறைக்குள் சுருக்க வேண்டும், அனைவருக்குமே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்க வேண்டும், தொடர்ச்சியாக இடஒதுக்கீட்டு முறையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினர்.
5 அம்ச கோரிக்கை:
‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ இன்ஸ்டா பக்கத்தை தொடங்கியவர் வேதாந்த் என்ற மாணவர். தற்போது அது அஜீத் பார்தி என்ற இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இயக்கம் சாதிவாரி இடஒதுக்கீட்டை அப்புறப்படுத்த 5 அம்ச கோரிக்கையை முன்வைக்கிறது.
* சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு மாற்றாக வருவாய் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வறுமைக்கு சாதிப் பாகுபாடுகள் கிடையாது என்கின்றனர்.
* ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இட ஒதுக்கீடு, அதுவும் ஒரு முறை மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
* அதேபோல் பூர்த்தி செய்யப்படாத இடஒதுக்கீட்டு சலுகைகளை பொதுப் பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
* இடஒதுக்கீட்டு சலுகையிலிருந்து பொருளாதார ரீதியாக வலிமையாக உள்ளவர்களை விலக்கிவைப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
* கல்வி ஏற்றத்தாழ்வு குறையும்போது, இடஒதுக்கீட்டை படிப்படியாக நிறுத்துவதற்கான 'சன்செட் கிளாஸ்' (Sunset Clause) விதியை கொண்டு வர வேண்டும், இடஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
ஆனால், இவற்றில் பெரும்பாலானவை அரசியல் ரீதியாகவும், அரசியல் சாசனத்தின்படியும் நிறைவேற்ற முடியாதவையே. நீதித்துறையின் ஆய்வுக்குத்தான் செல்லும்.
இந்தச் சூழலில்தான் வேதாந்த், “இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி முதலில் ஆழமான, விரிவான ஆலோசனைகள் எழ வேண்டும். மக்கள் இதன்மீது ஒரு நீண்ட, நெடிய தயக்கம் கொண்டுள்ளனர். இந்த தயத்தை உடைத்துப் பேச வேண்டும். பேசித் தெளியாமல் புரட்சி செய்வது வீண்” என்று கூறியுள்ளார்.
இப்போதைக்கு இணையவழி எதிர்ப்பே நிலவும் சூழலில், அதுவும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது நிமித்தமான கருத்துகளையே வரவேற்கும் சூழலில் அரசு என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.