

ஜம்மு: கடந்த 2013-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இம்தியாஸ் அகமது காண்டூ. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
இவரைக் கைது செய்ய, இன்டர்போலிடம் இருந்து ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ ஒன்றை எஸ்ஐஏ தற்போது பெற்றுள்ளது. இந்த நோட்டீஸ், உறுப்பு நாடுகளின் காவல் துறையினர் காண்டூவைக் கண்டறியவும், தடுத்து வைக்கவும், இந்தியாவுக்கு நாடு கடத்தவும் உதவும். இவர் பாகிஸ்தானுக்குத் தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு, சோப்பூர் ஹைகாமில் உள்ள பீர் மொஹல்லாவில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று நடந்த தாக்குதலுடன் தொடர்புடையது. தானியங்கி ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.
வழக்கு முதலில் தர்சூ காவல் நிலையத்தில் பதிவானது. பின்னர் 2024-ல் விரிவான விசாரணைக்காக எஸ்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில், 2024 ஜூலையில் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.