

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியைச் சேர்ந்த டி.சூரஜ் - விஜிஷா தம்பதியரின் 18 மாத குழந்தை, கடந்த ஜூலை 5-ம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது தவறி கீழே விழுந்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டது.
பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்குக் குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவனது காயத்துக்கு தையல் போடுவதற்காக மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
மயக்க மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததுடன், அவன் சுயநினைவையும் இழந்தான். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காகக் கண்ணூரில் உள்ள தங்களின் மற்றொரு பிரிவுக்கு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை மாற்றியது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது தொடர்பாக, எரமத்தைச் சேர்ந்த குழந்தையின் உறவினர் கே.ராஜீவன் அளித்த புகாரின் அடிப்படையில், பையனூர் பேபி மெமோரியல் மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் அஞ்சலி போதுவால் மீது பையனூர் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.