வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த காட்டு யானை! - மேற்கு வங்க தேர்தல் சுவாரஸ்யம்

வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த காட்டு யானை! - மேற்கு வங்க தேர்தல் சுவாரஸ்யம்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு காட்டு யானை ஒன்று காலையிலேயே வந்ததால் அதிகாரிகளும் வாக்காளர்களும் அச்சமடைந்தனர்.

தேர்தலின்போது செல்வாக்குமிக்கவர்கள் வாக்குப்பதிவு மையங்களில் தம் பலத்தைக் காட்ட முயல்வது மேற்கு வங்க அரசியலில் சாதாரணமானதுதான் என்ற போதிலும், இது ஒரு வித்தியாசமான பலப் பிரயோகமாக இருந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க ஜிதுஷோல் தொடக்கப் பள்ளிக்கு வரத் தொடங்கிய நிலையில், திடீரென ராம்லால் என்ற காட்டு யானை பள்ளிக்குள் நுழைந்தது. மெதுவாக நடந்து சுற்றி வந்த அந்த யானையைப் பார்த்து வாக்குப் பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகளும் வாக்காளர்களும் அச்சமடைந்தனர்.

வாக்காளர்கள் நின்று கொண்டிருந்த வரிசையைக் கடந்து சென்ற அந்த யானை, அங்கிருந்த வாகனங்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. இதனால், தேர்தல் பணிகள் சற்று தாமதமாகின. எனினும், லோதாஷூலி சரகத்தில் இருந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை மெதுவாக பாதுகாப்பான தூரத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வாக்குப்பதிவு மையம் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.

காடுகளை ஒட்டிய பகுதி என்பதால், வனத்துறைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகளும் காலை முதலே தயார் நிலையில் இருந்ததால், யானை விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது. ராம்லால் என்ற பெயர் கொண்ட இந்த யானை அடிக்கடி இப்பகுதிக்குள் வரும் என்றும் கிராம மக்கள் உணவுகளை வழங்கி மகிழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த காட்டு யானை! - மேற்கு வங்க தேர்தல் சுவாரஸ்யம்
மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in