''கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' - பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

''கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' - பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் கான்ஷிராமுக்கு, மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று கான்ஷிராமின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், அவரது பாரம்பரியத்தையும் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து, அவருக்கு மரணத்திற்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எழுதுகிறேன்.

இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர் கான்ஷிராம். தனது இயக்கங்கள் மூலம், பகுஜன்கள் மற்றும் ஏழைகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அவர். அவர்களின் வாக்கு, குரல் மற்றும் பிரதிநிதித்துவம் முக்கியமானவை என்பதையும், இந்த நாடு அனைவருக்கும் சமமாகச் சொந்தமானது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டியவர். அவரது முயற்சிகளால், பொது வாழ்க்கையில் நுழைய எண்ணாத பலரும் அரசியலை நீதி மற்றும் சமத்துவத்தை அடையும் வழியாகக் கருதத் தொடங்கினர்.

நமது அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் பங்கேற்பை உறுதியளிக்கிறது. கான்ஷிராம் தனது வாழ்க்கையை சமூகத்தின் அடிநிலையில் உள்ளவர்களுக்கு இந்த உறுதிமொழிகளை உண்மையாக்குவதற்காக அர்ப்பணித்தார். அவ்வாறு செய்வதன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார். மேலும், நமது அரசியல் அமைப்பை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், நீதியானதாகவும் ஆக்கினார்.

பல ஆண்டுகளாக, தலித் அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கான்ஷிராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்ச்சியானதாகவும் ஆழமாக உணரப்பட்டதாகவும் உள்ளது. சமீபத்தில், லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு தலைவர்களும் பங்கேற்பாளர்களும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலுவாக வலியுறுத்தினர். இது பரவலான உணர்வை பிரதிபலிக்கிறது.

அவருக்கு மரணத்துக்குப் பிந்தைய பாரத ரத்னா வழங்குவது, நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பதாக அமையும். அவரை அதிகாரமளிப்பதன் சின்னமாகவும், நம்பிக்கையின் சின்னமாகவும் தொடர்ந்து பார்க்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆசைகளை இது கவுரவிப்பதாக இருக்கும். அரசு இந்தக் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

''கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' - பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in