

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட இருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் சுமார் 300 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நேற்று (செவ்வாய்கிழமை) பேரணியாகச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று மதிய விருந்தளித்தார். மத்திய டெல்லியின் ஜன்பத் பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த விருந்து அளிக்கப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று நான் கூறியதுபோல சுமார் 300 எம்பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க விரும்பினர். ஆனால், அங்கு போராட்டம் நடத்த முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே, போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு போராட திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கிருந்து அவர்கள் ஜந்தர் மந்தருக்கு மூன்று பேருந்துகளில் புறப்பட்டனர். அவர்களின் பேருந்துகளை அசோகா சாலையில் மறித்த டெல்லி போலீஸார், ஜந்தர் மந்தரில் முன் அனுமதியின்றி போராடக் கூடாது என கூறினர்.
பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தூக்கி பேருந்தில் அமர வைத்தனர். அதேபோல், பிற எம்பிக்களும் கைது செய்யப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி சாலையிலேயே படுத்துக்கொண்டார். பெண் போலீஸார் அவரை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டியும் வந்தே மாதரம் என்று கூறியும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். கைது நடவடிக்கைகளும் தடியடியும் தீர்வாகாது. இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். குறிப்பிட்ட இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த எங்களை அனுமதிக்கவில்லை. இப்படியே இருந்தால் ஜனநாயகம் எப்படி செயல்படும். நாங்கள் மீண்டும் வருவோம்” என தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா, “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மூன்று பேருந்துகளில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஜந்தர் மந்தருக்குச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, இங்கு பிஎன்எஸ்எஸ்-ன் பிரிவு 163 அமலில் உள்ளது.
உரிய அனுமதி இன்றி இங்கு போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை. அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் நாங்கள் அதை மனதில் கொண்டு அவர்களிடம் கண்ணியத்துடனும் முறையான நெறிமுறைகளுக்கு இணங்கவும் நடந்து கொள்வோம்” என தெரிவித்தார்.