ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம்: ராகுல் காந்தி அறிவிப்பு

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம்: ராகுல் காந்தி அறிவிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் சுமார் 300 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நேற்று (செவ்வாய்கிழமை) பேரணியாகச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று மதிய விருந்தளித்தார். இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று நான் கூறியதுபோல சுமார் 300 எம்பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க விரும்பினர். ஆனால், அங்கு போராட்டம் நடத்த முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே, போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு மீண்டும் ஒன்றுகூடி அமர்ந்து, ஞானேஷ்குமார் நாட்டின் முறையான தேர்தல் ஆணையர் அல்ல என்பதை நாட்டுக்கு தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தலைமைத் தேரதல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ளனர். இவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளனர். இவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை இப்போதே சொல்கிறேன். ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும்.” என தெரிவித்தார்.

ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “எனக்கு எதிராக ஏற்கெனவே 45 வழக்குகள் உள்ளன. என் இலக்கு 100 வழக்குகளைப் பெறுவதுதான். எனக்கு எதிராக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வழக்கும் எனக்கு ஒரு பதக்கத்தைப் போன்றது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடருவோம். தேர்தல் ஆணையம் இழைக்கும் தவறுகளும், பிரதமர் மோடியால் நிகழ்த்தப்படும் செயல்களும் அவர்கள் இந்த நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வர முயல்கிறார்கள் என்பதையே காட்டுகின்றன. அவர்கள் அரசியலமைப்பையும் மதிப்பதில்லை.

எனவே, மக்களின் குரல் நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதுவே எங்கள் பணி” என தெரிவித்தார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம்: ராகுல் காந்தி அறிவிப்பு
‘நிலைகுலைந்த சதிகாரர்கள்’ - ராகுல் மீதான எப்ஐஆர் பதிவுக்கு காங்கிரஸ் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in