

ராகுல் காந்தி
புதுடெல்லி: கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்' பதிவில் கூறியிருப்பதாவது:
யுடிஎப் அணியின் ஒவ்வொரு வேட்பாளரும் கேரள மக்களின் குரலையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, கேரளம் எனது இல்லம். கேரள மக்கள் எனது குடும்பத்தினர். அவர்கள் என் மீது பொழிந்த அன்புக்கும், அரவணைப்புக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.
கேரளத்திலிருந்து வரும் செய்தி மிகத் தெளிவானது. மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். தங்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்கும், அதற்கு நேர்மையுடன் தீர்வு காணும் ஓர் அரசையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வரவிருக்கும் யுடிஎப் அரசுடன் இணைந்து, இந்த அழகிய மாநிலத்துக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.