

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் உயிரிழந்த சஜ்ஜன் குமாரை காங்கிரஸ் தலைவர்கள் ஹீரோ என புகழ்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தியின் வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. டெல்லி கலவரத்தில் மட்டுமே சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சஜ்ஜன் குமார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அவரை ஹீரோ என்றும் ரோல்மாடல் என்றும் புகழாரம் சூட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய தலைவர்களும், 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களும் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹர்மீத் சிங் கல்கா, பொதுச்செயலாளர் ஜெகதீப் சிங் காலோன் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்றவர்கள் சஜ்ஜன் குமார் குறித்த காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளால் தங்கள் உணர்வு புண்பட்டதாகவும், இதற்காக ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போராட்டத்தையொட்டி ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.