புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “நீட் - யுஜி 2026 வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்த மாணவர் போராட்டங்கள் கோபம், வன்முறை, வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. மாறாக, அது இந்திய இளைஞர்களின் ஆழ்மன வெளிப்பாடு. பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும். என தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘மாணவர்’ என்பதன் பொருள் குறித்து இளம் மாணவி ஒருவருடன் தான் மேற்கொண்ட உரையாடலை விவரித்தார். “நீங்கள் ஒரு மாணவர் என்று என்னிடம் கூறினீர்கள். அதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். நான் கலந்துரையாடிய மாணவி, அதற்கான பொருளை மிக அழகாக அளித்தார். “மாணவர் என்பவர் திறந்த மனமும் திறந்த இதயமும் கொண்டவர். தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக்கொள்பவரே மாணவர்.
தனக்குத் தெரிந்த விஷயங்களை, பிற்காலத்தில் புதிய அறிவு விஞ்சிவிடும் என்பதை மாணவர் ஏற்றுக்கொள்கிறார். பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது, இயங்கிக் கொண்டிருக்கிறது, நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, அறிவும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மாணவர் புரிந்துகொள்கிறார். ஒரு மாணவரின் மிக முக்கிய பண்பு பணிவுதான்.” என தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில், உண்மை எது என்பது தனக்குத் தெரியாது என்பதை மாணவர் அறிவார். அதேநேரத்தில், மற்ற உயிரினங்கள் மற்றும் மனிதர்களின் உண்மைகளை அவர் மதிக்கிறார். என்று கூறியதுபோல. உண்மையை நோக்கிய எனது தேடல், இது என்னுடைய உண்மை; உங்கள் உண்மை வேறாக இருக்கலாம்.” என தெரிவித்தார்.
ராகுல் காந்தி தொடர்ந்து விவரித்துக் கொண்டிருந்தபோது, ஆர்எஸ்எஸ் குறித்து அவர் பேசிய ஒரு வார்த்தை ஆளும் தரப்பு எம்பிக்களிடையே, கடும் ஆட்சேபனையை ஏற்படுத்தியது.
அப்போது, ராகுல் காந்திக்கும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிரண் ரிஜிஜு தனது உரையின்போது, “ராகுல் காந்தி நாடாளுமன்ற மரபுக்கு ஒவ்வாத வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இல்லாவிட்டால், யாரும் அவரது பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்க மாட்டார்கள். அவர் ஒரு மாணவியின் பெயரில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாகக் கூறினாலும், உண்மையில் அவரே அதைச் சொல்கிறார். நாடாளுமன்ற மரபுக்கு ஒவ்வாத வார்த்தையை அவர் பயன்படுத்தக்கூடாது. அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்துப் பேசிய மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திய நாடாளுமன்ற மரபுக்கு எதிரான வார்த்தையை நீக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எங்கள் தரப்பில் உள்ள அனைவரும் அமைதி காத்து அவர் பேசுவதை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அவைக் குறிப்பில் இருந்து அந்தக் குறிப்பிட்ட வார்த்தையை நீக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.