“போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே” - நட்டா விளக்கம்

“போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே” - நட்டா விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: “போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே. டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,” என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதால், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

‘காவல்துறை அத்துமீறல்’ குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாநிலங்களவையில் பேசிய சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், “மாணவர் தலைவர் ஆயிஷே கோஷை கைது செய்வதற்காக டெல்லி போலீஸார், டெல்லியில் உள்ள சிபிஎம் தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதைத் தவிர வேறு எந்த தவறும் அவர் செய்யவில்லை.

இது குறித்து காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியபோது, டெல்லி ஜேஎன்யு வளாகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக ஆயிஷே கோஷ் மீது 2021-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.” என்றார்,

காவல்துறை நடவடிக்கையை கண்டித்துப் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜக ஆட்சியில் ஜனநாயகம் பாதுகாப்பாக இல்லை. மக்கள் பாதுகாப்பாக இல்லை. மாணவ போராட்டக்காரர்கள் மீது கடுமையான வன்முறையைப் பயன்படுத்தியவர்கள் இன்னமும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவது இயல்பானதே. போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அவசரநிலை காலத்தின்போது மாணவ செயற்பாட்டாளராக இருந்த நான், வகுப்பறையில் இருந்து இரண்டுமுறை அழைத்துச் செல்லப்பட்டேன்.

சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் வரும் நோக்கிலேயே அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டது. காவல்துறையின் நடவடிக்கைகள் நியாயமானவையே.” என தெரிவித்தார்.

“போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே” - நட்டா விளக்கம்
“ஜந்தர் மந்தரில் போராடியவர்களால் நாட்டுக்கு அவப்பெயர்” - பாபா ராம்தேவ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in