

புதுடெல்லி: கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தென்கோடி முனையான ‘இந்திரா பாயிண்ட்' பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டேன். அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் குடியேறியவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை இத்துடன் பகிர்ந்துள்ளேன்.
கிரேட் நிக்கோபார் கடல் பகுதியில் ‘ஸ்கூபா டைவிங்' எனப்படும் ஆழ்கடல் நீச்சல் மேற்கொண்டு, அங்கிருக்கும் பவளப்பாறைகளைப் பார்வையிட்டு, உள்ளூர் மக்களுடன் உரையாடினேன்.
அப்போது, மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்தால் வன உரிமைச் சட்டம் மீறப்பட்டு, பழங்குடியின மக்கள் தங்களது நிலங்களை இழந்து வருவது குறித்து அறிந்து கொண்டேன். மேலும், அரசாங்கத்தால் அங்கு மறுகுடியேற்றம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட குடியேறிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தால், ‘ஐஎன்எஸ் பாஸ்' தளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் காரணமாக 1.5 கோடி மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது. பவளப்பாறைகள் சேதமடைவதுடன், பழங்குடியின மக்களும், ராணுவப் பணியாளர்களும் இடம்பெயர நேரிடும்.
மேலும், பவளப்பாறைகள் இருக்கும் விவரம் அதிகாரப்பூர்வ வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவுகள் உலகம் இதுவரை கண்டிராத மிக அசாதாரணமான, நிலையான சுற்றுலாத் தலமாக விளங்க தகுதியானவை. அத்தகைய இந்தியாவிற்காகவே நாம் போராட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.