

மொகாலி: பஞ்சாபின் பட்டியாலா பகுதியை சேர்ந்தவர் டிம்பிள் (29). அவர் மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஹரிந்தர் சிங் மானும் (34), டிம்பிளும் 3 ஆண்டுகள் தீவிரமாக காதலித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு டிம்பிள் காதலை முறித்துக் கொண்டார். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மொகாலி அலுவலகத்தில் டிம்பிள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அறைக்குள் ஹரிந்தர் சிங் திடீரென நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிம்பிளை சரமாரியாக குத்தினார். 35 விநாடிகளில் 30 முறை கத்திக் குத்து விழுந்தது. சக ஊழியர்கள் ஓடி வந்து ஹரிந்தரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கத்தியால் குத்தி விடுவதாக அவர் மிரட்டினார்.
இறுதியில் ஊழியர் ஒருவர், ஹரிந்தரை மடக்கிப் பிடித்தார். படுகாயமடைந்த டிம்பிள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஹரிந்தர் தனது கழுத்தில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொகாலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.