

கேதன் விஷால், சியா கோயல், சேத்தன் சவுத்ரி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகிலுள்ள கஹுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் கேதன் விஷால் (25). இவர் தனது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.
இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் கேதன் கடந்த 19-ம் தேதி தனது வருங்கால மனைவி சியாவின் பிறந்தநாளை கொண்டாட அவருடன் தங்கள் பகுதியில் உள்ள லோகாகாட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு சுமார் 350 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து கேதன் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கூறியதாவது: சேத்தன் சவுத்ரி (22) என்ற இளைஞருடன் சியா காதலில் இருந்துள்ளார். கேதனை திருமணம் செய்துகொள்ள அவருக்கு விருப்பமில்லை. இதனால் கேதனை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். அவரது முதல் முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது முயற்சியில்தான் கேதன் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கு முன் ஜூன் 14-ம் தேதி கேதனுடன் லோகாகாட் கோட்டைக்கு சியா மலையேற்றப் பயணம் சென்றுள்ளார். அப்போது பாம்பு வந்துவிட்டது என்ற பயமுறுத்தி கேதனை கீழேதள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. சியா மீது கேதனும் சந்தேகம் அடையவில்லை.
இதையடுத்து ஜூன் 19-ம் தேதி லோகாகாட்டிற்கு மற்றொரு பயணத்துக்கு சியா திட்டமிட்டார். இந்தப் பயணத்தின்போது காதலன் சேத்தன் சவுத்ரி ரகசியமாக பின்னால் வரவழைக்கப்பட்டார். பிறகு இருவரும் சேர்ந்து கேதனை மலைப்பள்ளத்தாக்கில் தள்ளி கொன்றுள்ளனர்.
சியாவிடம் நடத்திய விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மொபைல் போன் பதிவுகள், சமூக ஊடக செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் உண்மை தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீஸார் கூறினர். இந்தச் சம்பவம் கேதன்- சியா திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.