

பபித், சுஜித்குமார், சுவின்
திருநெல்வேலி/ சென்னை: கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்ததுடன் உடல்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள ராஸ் லப்பான் தொழிற்பேட்டையில், பர்சான் என்ற எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வந்தநிலையில், மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில், அங்கிருந்த தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 12 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், 66 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 3 பேர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது விவரம் வருமாறு: பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் முத்துராஜ் மகன் சுஜித்குமார் (25). இவர் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி கத்தாருக்கு சென்றுள்ளார். இவரது தந்தை டிராக்டர் ஓட்டுநர். தாய் மல்லிகா கூலி தொழிலாளி. உயிரிழந்த சுஜித்குமார் இவர்களுக்கு ஒரே மகனாவார். இதுபோக, அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்த மிக்கேல் மகன் சுவின் (24), சிதம்பராபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன் பபித் (26) ஆகியோரும் உயிரிழந்தனர். கத்தாரில் நடைபெற்ற தொழிற்சாலை விபத்தில் உயிர் இழந்த இந்த 3 பேரின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.
இதனிடையே இச்சம்பவம் குறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர, வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், விபத்து குறித்து அறிய இந்தியாவுக்குள் +91 1800 309 3793 என்ற எண்ணிலும் வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற எண்களையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.